வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படுமா..? பாஜக Vs காங்., - வெடித்த ட்ரெயின் அரசியல்

Update: 2024-05-10 17:10 GMT

வந்தே பாரத் ரயில் சேவையை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக பாஜகவும், வந்தே பாரத் போன்ற விலை உயர்ந்த ரயில்கள் காலியாகவே இயங்குவதாக காங்கிரஸும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு....

கடந்த மே 5ஆம் தேதி உத்தர பிரதேசத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச ரேஷன் திட்டம் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவையை நிறுத்துவோம் என கூறி வருவதாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், கேரளா காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில், வந்தே பாரத் ரயில் சேவை குறித்து பகிர்ந்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகியுள்ளது.

அதில் விடுமுறை தொடங்கிவிட்ட பிறகும் 50 சதவீதத்திற்கும் மேலான வந்தே பாரத் ரயில்கள் பெரும்பாலும் காலியாகவே இயங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்ற ரயில்களில் அனைத்தும் காத்திருப்பு பட்டியலில் இருப்பதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் ரயில் சேவையின் தேவை அதிகம் இருக்கிறது என்பதும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்தே பாரத் ரயில் சேவையை பயன்படுத்த போராடுவதும் தெளிவாக தெரிவதாக ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை பகிர்ந்துள்ளது.

கூட்ட நெரிசல் மிகுந்த ரயில்களின் காட்சிகளையும் பகிர்ந்து உள்ள காங்கிரஸ் கட்சி, வந்தே பாரத் ரயில்களின் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும், பெரும்பாலானோர் அந்த ரயில் சேவையை பயன்படுத்த வேண்டுமென்றால் பொருளாதார வளர்ச்சி முக்கியம் என்றும் தெரிவித்து, மத்திய பாஜக அரசை விமர்சித்துள்ளது.

காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இது பொய்யான தகவல் என்றும், மே 7 ஆம் தேதி வந்தே பாரத் ரயில்கள் 98 சதவீதம் நிரம்பி இருந்ததாகவும், 2024-25 ஆம் நிதியாண்டில் மே 7ம் தேதி வரை 103 சதவீதம் நிரம்பி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த தரவுக்கு போதுமான ஆதாரங்கள் என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, 51 வந்தே பாரத் ரயில்களுக்கான முன்பதிவு தரவுகளை தனித்தனியாக வெளியிட தயாரா? என மத்திய ரயில்வே அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளது.

காங்கிரஸின் இந்த சவாலை ஏற்று தரவுகளை வெளியிடுவாரா ? மத்திய ரயில்வே துறை அமைச்சர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....

Tags:    

மேலும் செய்திகள்