அரியானாவில் பாஜக அரசு கலைப்பா?.. காங்.பக்கம் சாய்ந்த கூட்டணி கட்சி - 3 பேரால் ஆட்டம் காணும் அரியணை

Update: 2024-05-09 09:49 GMT

அரியானாவில் பாஜக அரசை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தும் வேளையில் அம்மாநில அரசியலில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

90 உறுப்பினர்களை கொண்ட அரியானாவில், 2019 சட்டப்பேரவை தேர்தலில் 40 இடங்களில் வென்ற பாஜக, 10 இடங்களில் வென்ற துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவோடு அரியணையில் ஏறியது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கவும் இரு கூட்டணி கட்சிகள் இடையேயும் பிளவு விஸ்தரித்தது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் போக ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது.

பாஜக முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்தார். நயாப் சிங் சைனியை முதல்வராக அறிவித்தது பாஜக.

முதல்வர் பொறுப்பை ஏற்ற நயாப் சிங் சைனி, மார்ச் மாதம் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தார். கூட்டணியில் இருந்து விலகிய ஜனநாயக ஜனதா கட்சி வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

இறுதியில் சுயேட்சைகள் ஆதரவை பெற்ற பாஜக 48 எம்.எல்.ஏ.க்கள் வாக்கோடு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியில் அமர்ந்தது.

இந்த சூழலில்... பாஜக அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அறிவித்தனர். இதுதான் மாநிலத்தில் மீண்டும் புயலாக கிளம்பியிருக்கிறது.

சட்டப்பேரவையில் 2 இடங்கள் காலியாக இருக்க பாஜகவுக்கு பெரும்பான்மைக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அவசியமாகிறது. ஆனால் 40 பாஜக எம்.எல்.ஏ.க்கள், அரியானா லோக்நிதி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., ஒரு சுயேட்சை ஆதரவு என 42 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே பாஜகவுக்கு உள்ளது.

பெரும்பான்மைக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அவசியமாகிறது. இந்த வேளையில் பெரும்பான்மையை இழந்துவிட்ட பாஜக அரசை கலைக்க வேண்டும், நயாப் சிங் சைனி முதல்வர் பதவியில் இருக்கக்கூடாது என்கிறது காங்கிரஸ்.

பாஜக அரசை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த ஆளுநருக்கு கடிதம் எழுதுவதாக சொல்கிறது காங்கிரஸ்... பாஜக அரசை கலைக்கும் காங்கிரஸ் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜனநாயக ஜனதா கட்சியும் அறிவித்துள்ளது.

பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கினாலும்... இப்போதைக்கு பாஜக அரசுக்கு ஆபத்து இல்லை என்ற சூழலே உள்ளது.

ஆம்... ஜனநாயக ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவ தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுபோக, சட்டப்படி மாநிலத்தில் ஒரு அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை 6 மாத இடைவெளியிலே சந்திக்க வேண்டும்.

ஏற்கனவே மார்ச் மாதம் பெரும்பான்மையை நிரூபித்துவிட்ட பாஜக அரசு, செப்டம்பர் மாதம் வரையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற சூழலே உள்ளது.

மாநிலத்தில் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. எனவே அரியானாவில் பாஜக அரசு பாதுகாப்பாகவே இருக்கிறது.. 

Tags:    

மேலும் செய்திகள்