புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.;
மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்களின் எண்ணிக்கை வரும் 2026 முதல் அதிகரிக்கப்பட உள்ள நிலையில், புதிய நாடாளுமன்றத்தை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, டாடா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர், குடியரசு துணை தலைவருக்கு பிரத்யேக இல்லங்கள், பிரதமர் அலுவலகம், மத்திய செயலகம், மக்களவை, மாநிலங்களவை, நூலகம் ஆகியவை நவீன வசதிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இதனை தொடர்ந்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டு விழாவில் சர்வமத பிரார்த்தனை
தொடர்ந்து பல்வேறு மத குருக்கள் சர்வமத பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களை துணை சபாநாயகர் ஹரிவன்ஸ், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, டாடா தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் பிரதமருடன் அடிக்கல் நாட்டு நிகழ்வில் பங்கேற்றனர்.. இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட 200 முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் மத தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.