கர்நாடகாவில் 4- வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா
கர்நாடகாவில், 4 -வது முறையாக அம் மாநில பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார்.;
கர்நாடகாவில், 4 -வது முறையாக அம் மாநில பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா, முதலமைச்சராக பதவி ஏற்றார். பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் மாலை நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், கடவுளின் பெயரில், சத்தியம் செய்து, பதவி ஏற்ற எடியூரப்பாவுக்கு, கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஜூலை 29 - ல் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு :
கர்நாடகாவில், எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றாலும், வருகிற 31 ம் தேதிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா, " கெடு" விதித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தாமதம் செய்து வந்த பாஜக, திடீரென ஆட்சி அமைக்க உரிமை கோரியது ஏன் ? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் தங்கி இருந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் வீடியோ கால் மூலம் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதேநேரம், 31 ம் தேதி வரை, அவகாசம் இருந்தபோதிலும், முன்னதாக, 29 ம் தேதி, திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க போவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.மேலும் 5 எம்.எல்.ஏக்களை செவ்வாய்க்கிழமை சஸ்பெண்ட் செய்ய கர்நாடக சபாநாயகர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதால், திங்கட்கிழமையே, பேரவையில் நிதி மசோதாவை அறிமுகம் செய்து, நிறைவேற்ற எடியூரப்பா, அதிரடி வியூகம் வகுத்துள்ளார். இதனிடையே, நாளை சனிக்கிழமை டெல்லி சென்று, அமைச்சரவை குறித்து அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக பெங்களூரு தகவல்கள் தெரிவிக்கின்றன.