மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது வாட்ஸ்-அப் நிறுவனம்

வாட்ஸ் அப் மூலம் பரவும் தகவல்களை முதலில் யார் அனுப்பியது என கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை அந்த நிறுவனம் நிராகரித்துள்ளது.

Update: 2018-08-24 08:56 GMT
வாட்ஸ் அப், facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமான வதந்திகள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வதந்தி பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு இருமுறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. வாட்ஸ் அப்-பில் தகவல்களை பகிர்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனமும் பதிலளித்தது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியா வந்திருந்த வாட்ஸ் அப் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியலை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சந்தித்தார். அப்போது, வாட்ஸ் அப் பில் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், செய்தியை முதலில் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிக்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்று கிறிஸ் டேனியலிடம், அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையை வாட்ஸ் -அப் நிறுவனம் நிராகரித்துள்ளது. 

"தகவல் பரிமாற்றத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வந்தால், அது வாட்ஸ் அப்பின் அடிப்படை கட்டமைப்பான தனியுரிமையை பாதிக்கும் என்றும் அதனால் இதுபோன்ற நடவடிக்கைகளை வாட்ஸ் -அப் நிறுவனம் ஒருபோதும் மேற்கொள்ளாது என்றும் வாட்ஸ் அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்