முன்னுரிமை அடிப்படையில் உடல் உறுப்பு வழங்கப்படுகிறதா..?

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இதுதொடர்பாக மருத்துவமனையில் உள்ள நடைமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

Update: 2018-06-23 12:43 GMT
கேரளாவை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், தமிழகத்தில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அந்த உடல் உறுப்புக்களை பொருத்தியதில் முறைகேடு நடந்ததாக தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்தது. 

இந்த விவகாரம் விசாரணையில் உள்ள நிலையில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியர்கள் பலரும் காத்திருக்கும் நிலையில், வெளிநாட்டினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து,  உடல் உறுப்புகள் பொருத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

 
பல பொய்யான காரணங்களை கூறி இந்தியர்களை புறக்கணித்து விட்டு வெளிநாட்டவர்களுக்கு உடல் உறுப்புகளை வழங்குவதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர் ரவீந்திரநாத் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்... 


உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தில் இதுவரை எந்தவொரு இந்தியரும் புகார் தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் முதல் உறுப்பினர் செயலர் அமலோற்பவநாதன்...  


அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்புக்காக காத்திருப்பவர்களின் பட்டியலைப் பொறுத்தே உடல் உறுப்புகள் வழங்கப்படுவதாகவும், இதில் இந்தியர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் தான் அது வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறுகிறார் அரசு மருத்துவர் அமிர்தராஜ்... 

உயிரைக் காக்கும் விஷயம் இது என்பதால் முறைகேடுகளை தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு முன் வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்