கைப்பற்றப்பட்ட ரூ.350 கோடி.. "எனக்கும், காங். கட்சிக்கும் தொடர்பில்லை" - காங். எம்.பி.

x

ஒடிசா வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக 350 கோடி ரூபாய் பணம் அதிரடியாக கைப்பற்றப்பட்ட நிலையில், அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனது குடும்பத்தினரே அதற்கு பதிலளிப்பார்கள் என்றும், காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹு தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹுவுக்கு தொடர்புடையதாக கூறப்படும் மதுபான உற்பத்தி நிறுவனமான பல்தேவ் சாஹு மற்றும் குழுமம் மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின்பேரில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், சுமார் 350 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், வருமான வரி சோதனை குறித்து காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹு, முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். மதுபான உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களை தனது குடும்பத்தினர் நடத்தி வருவதாகவும், இதில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், இதுகுறித்து தனது குடும்பத்தினரே விளக்கம் அளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் தனக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். வருமான வரித்துறையிடம் உரிய கணக்கை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தீரஜ் பிரசாத் சாஹு குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்