பசித்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. வானில் இருந்து வந்த நிவாரண பெட்டி- தலை சிதறி பலியான 5 பேர்..

x

போரால் சிதைந்துள்ள காசாவில், விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள் பெட்டியின் பாராசூட் திறக்காததால், உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது பெட்டி விழுந்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

5 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் உண்ண உணவின்றி பட்டினியால் பரிதவித்து வருகின்றனர். ஐநா மூலம் நிவாரண பொருட்கள் ரஃபா எல்லை வழியாக அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தீவிரமடைந்த போர்ச்சூழலால் இதில் தோய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காசா மக்களுக்காக, ஜோர்டன், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் விமானம் மூலம் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், காசா நகரில் அல் ஷதி அகதிகள் முகாமில் உணவுக்காக மக்கள் காத்திருந்த போது, விமானம் மூலம் உணவு அடங்கிய நிவாரண பொருட்கள் பெட்டிகள் வீசப்பட்டன. இதில் ஒரு பெட்டியின் பாராசூட் திறக்காததால், அது கீழே உணவுக்காக காத்திருந்த மக்களின் தலையில் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததோடு, சிலர் படுகாயமடைந்தனர். காசா மக்களின் இந்த அவலநிலையை போக்க, தரைவழி போக்குவரத்து மூலம், நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல உரிய அனுமதி அளிக்க வேண்டும் என இஸ்ரேலை சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்