கொரோனா பாதிப்பு எதிரொலி - அதிகரிக்கும் வீடுகளை இழந்தவர் எண்ணிக்கை : மன்ஹட்டான் பகுதியில் வெகுவாக அதிகரிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கொரோனா பாதிப்புகளினால் வீடுகளை இழந்து சாலைகளில் வசிப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பு எதிரொலி - அதிகரிக்கும் வீடுகளை இழந்தவர் எண்ணிக்கை : மன்ஹட்டான் பகுதியில் வெகுவாக அதிகரிப்பு
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹட்டன் தீவு, வானுயர்ந்த கட்டிடங்களுக்காக புகழ் பெற்ற இடமாகும். ஐ.நா சபையின் தலைமையகம் மற்றும் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் தலைமையகங்கள் இந்த பகுதியில் அமைந்துள்ளன. மிக அதிக அளவில் செல்வம் கொழிக்கும் மன்ஹட்டன் பகுதியில் கொரோனா பாதிப்புகளினால் வீடிழந்து, சாலைகளில் வசிப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொரோனா தொற்றுதல்கள் வெகுவாக அதிகரித்த பின், நியூயார்க் நகரின் மன்ஹட்டன் பகுதியில் உள்ள அலுவலகங்களில் பணி புரிபவர்கள், வீடுகளில் இருந்து பணியாற்றத் தொடங்கினர். சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்ததால், சாலைகளில் வசிப்பவர்கள் எண்ணிக்கை அங்கு வெகுவாக அதிகரித்துள்ளது. இவர்களில் பலரும் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள். சிலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். நியூயார்க் நகராட்சி நடத்தும், இரவு நேர தங்குமிடங்களில் உறங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரியில் இதுவரை இல்லாத அளவுக்கு  20,822ஆக அதிகரித்துள்ளதாக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது. கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்ட பின் அலுவலகங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ள சிலர், சாலைகளில் வசிப்பவர்களை கடந்து செல்வது மன வேதனையை அதிகரிக்கச் செய்வதாக கூறுகின்றனர். இவர்களுக்கு அதிக அளவில் தங்குமிடங்களும்,  இலவச குடியிருப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று அங்கு பணிபுரியும் ஷாரன் கூறுகிறார். சாலைகளில் வசிப்பவர்கள், விற்பனையகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்டு தொல்லை செய்வதாக, ஒரு கடைக்காரர் கூறுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்