அதிரடி மாற்றங்களை அரங்கேற்றிய பைடன் - அமெரிக்க மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்று 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவர் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...
அதிரடி மாற்றங்களை அரங்கேற்றிய பைடன் - அமெரிக்க மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி
x
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்று 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவர் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக  கடந்த 20-ம் தேதி பொறுப்பேற்றார் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்... பதவியேற்பு விழாவில் அமெரிக்காவை பாதுகாப்பேன் என சூளுரைத்த அவர், அதிபராக தனது முதல் 10 நாட்களில், பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு உள்ளார்.30-க்கும் மேற்பட்ட செயல்திட்டங்களில் கையெழுத்திட்டுள்ள பைடன், முந்தைய அதிபர் டிரம்ப்பின் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் பலவற்றை தடாலடியாக ரத்து செய்து உள்ளார்.பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில்  அமெரிக்காவை மீண்டும் இணைப்பதற்கு பைடன் உத்தரவிட்டு உள்ளார். புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக விளங்கும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க கடந்த 2015-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. டிரம்ப் நிர்வாகம் பொருளாதாரத்தை சுட்டிக் காட்டி, இதில் இருந்து வெளியேறிய நிலையில், பைடன் மீண்டும் அமெரிக்காவை, அதில், இணைத்து உள்ளார்.கொரோனா பரவலின்போது, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவில்லை என்று குற்றம்சாட்டிய முந்தைய அதிபர் டிரம்ப், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டதாக அதிரடியாக அறிவித்தார். ஆனால், புதிதாக பதவியேற்றுள்ள பைடன், அமெரிக்காவை மீண்டும் உலக சுகாதார நிறுவனத்தில் இணைப்பதற்கு கையெழுத்திட்டு உள்ளார். மெக்சிகோ எல்லையில் சுவர் அமைக்கும் பணியை நிரந்தரமாக நிறுத்தி பைடன் உத்தரவிட்டுள்ளார். டிரம்ப் கொண்டுவந்த இந்த திட்டத்துக்கு, கடும் எதிர்ப்புகள் எழுந்திருந்த நிலையில், ஒட்டுமொத்த சுவர் எழுப்புவதற்தான நிதி ஆதாரத்தையும் பைடன் நிறுத்தி உள்ளார்.கீ ஸ்டோன் கச்சா எண்ணெய்க் குழாய் திட்டத்தையும் ரத்து செய்துள்ளார் பைடன்... கனடாவில் இருந்து குழாய்மூலம் கச்சா எண்ணெய் எடுத்துவர இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆரம்பம் முதலே இந்த திட்டத்தை எதிர்த்து வந்த நிலையில், பைடன் அதை தற்போது ரத்து செய்துள்ளார்.ஈரான், சிரியா, ஏமன் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்வதற்கு, டிரம்ப் விதித்து இருந்த தடையை பைடன் தகர்த்தெறிந்துள்ளார். முஸ்லிம் நாடுகளுக்கு பயணத் தடை விதிப்பது, அமெரிக்காவின் ஆன்மாவுக்கு அழகல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.தலிபான்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்கும் பைடன் உத்தரவிட்டு உள்ளார். அமைதி ஒப்பந்தத்துக்கு பிறகும், ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் தொடர்வதால், பைடன் மறு ஆய்வு முடிவை எடுத்துள்ளார்.அமெரிக்க ராணுவத்தில் 3-ம் பாலினத்தவரும் பணியாற்றுவதற்கு பைடன் அனுமதி அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் டிரம்ப் விதித்திருந்த தடையை தளர்த்தி, பாலின சமத்துவ ஆதரவாளர்களின் வரவேற்பை பைடன் பெற்றுள்ளார். ஹெச் - 4 விசா வைத்திருப்பவர்கள், அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற முந்தைய அதிபர் டிரம்ப் தடை விதித்து இருந்தார். தற்போது இந்த தடையை பைடன் நீக்கியிருப்பதால், அமெரிக்கவாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பதை தற்காலிகமாக நிறுத்தி பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்ட ஆயுத விற்பனை திட்டங்களை பைடன் நிர்வாகம் மறு ஆய்வு செய்ய உள்ளது.பொருளாதாரம், சுகாதாரம், தேச நலன், பாதுகாப்பு, உள்நாட்டு உற்பத்தி, பாலின சமத்துவம், உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் செயல் திட்டங்களுக்கும்  ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார், அமெரிக்க அதிபர் பைடன்... 

Next Story

மேலும் செய்திகள்