ஜோ பிடனின் அரசியல் நிலைப்பாடுகள் - மரண தண்டனைக்கு எதிரானவர் ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடனின் அரசியல் நிலைபாடுகள் பற்றி பார்க்கலாம்.
ஜோ பிடனின் அரசியல் நிலைப்பாடுகள் - மரண தண்டனைக்கு எதிரானவர் ஜோ பிடன்
x
தாராளவாத கொள்கைகளை உயிர் மூச்சாக கொண்டவர்   ஜோ பிடன்....  மரண தண்டனை மனித சமுதாயத்துக்கு எதிரானது என்ற  எண்ணம் கொண்டவர் அவர் ஒரே பாலினத்தவரின் திருமண உரிமைகளை ஆதரிக்கும் அவர் , மூன்றாம் பாலினத்தவர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்.

பெண் உரிமைகள் மற்றும் கருக்கலைப்பு செய்யும் உரிமையை ஆதரிக்கும்  ஜோபிடன் ,  ஏழைகளுக்கு அதிக அளவில் நலத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டவர்.

உலக நாடுகளுடன் சமாதான போக்குகளை கடைபிடித்து, நல்லுறவை வளர்க்க வேண்டும் என்பது அவரது திடமான எண்ணம்.

ஒரு  நாட்டின் மீது படையெடுக்க அல்லது வான்வழி தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் உருவானால், அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று, நாட்டு மக்களின் சம்மதத்தையும் பெற வேண்டும் என்பது ஜோபிடனின் கருத்து.

குடியரசு  கட்சி ஆட்சியின் போது ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்த போது, இந்த நடைமுறை கையாளப்படவில்லை என்பது  நினைவு கூரத்தக்கது.

துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கி உள்ள அமெரிக்காவில், துப்பாக்கிகள் வைத்திருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்  என்று  தொடர்ந்து வலியுறுத்தி வரும் அவர் துப்பாக்கி வாங்குபவர்களின் பின்புலத்தை பற்றிய தகவல்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு மட்டும்  வாங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர் 

கருப்பின மக்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று  குரல் கொடுத்து வரும் அவர் ,   பணக்காரர்கள் மீதான வரியை குடியரசு கட்சியினர் குறைத்ததை கடுமையாக எதிர்த்தார்.

தான் அமெரிக்க அதிபரானால், ஆண்டுக்கு 4 லட்சம் டாலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் மீது வரிகளை அதிகரிப்பேன் என்று தேர்தல் பிரசாரத்தின் போது பகிரங்கமாக அறிவித்தார் , ஜோ பிடன்.

பல முக்கிய விஷயங்களில் டிரம்பிற்கு நேர் எதிரான நிலைப்பாடுகளையும்  மிதவாத போக்குகளையும்  கொண்ட ஜோ பிடன், அமெரிக்க அதிபராக பதவியேற்றால், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் டிரம்ப் உருவாக்கிய மோதல் போக்குகள் முடிவுக்கு வரும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்