மதுரை கலெக்டர் ஆபீஸில் மெகா திருட்டு.. பொங்கல் பரிசில் தீபாவளி கொண்டாடிய அரசு ஊழியர்

x

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொங்கல் பண்டிகைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்பிலான இலவச வேட்டிகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவை மிஞ்சும் இதன் பரபரப்பு பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள, மதுரை வடக்கு மாவட்ட தாலுகா அலுவலகத்தில் அரங்கேறியிருக்கிறது இந்த மோசடி சம்பவம்....

சம்பவம் நடந்த தாலுகா அலுவலகத்திற்குள், கடந்த மாதமே தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் குவிக்கப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்தும் வரும் 2024 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு மக்களிடம் விநியோகம் செய்ய தயார் நிலையில் இருந்தன...

இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி கூடுதலாக மேலும், சில வேட்டி, சேலைகள் வந்த நிலையில், அதனை குடோனில் அடுக்கி வைப்பதற்காக அதிகாரிகள் திறந்த போது, அவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி....

குடோனின் கதவு தொட்டவுடன் திறந்ததும், பூட்டே இல்லாமல் இருந்ததும் அதிகாரிகளை திடுக்கிட செய்த நிலையில், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 15 லட்ச ரூபாய் மதிப்பிலான 12 ஆயிரத்து 500 வேட்டிகள் காணாமல் போனது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது...

உடனே, மாவட்ட ஆட்சியரிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை மற்றும் தல்லாக்குளம் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், காத்திருந்தது அடுத்த அதிர்ச்சி...

சம்பவம் நடந்த குடோனுக்கு, மோப்ப நாயுடன் வந்து விசாரணையை தொடங்கிய போலீசார், திருடப்பட்ட வேட்டிகள் பண்டல் பண்டல்களாக அடுக்கப்பட்டிருந்ததை அறிந்து, அதனை சாதாரணமாக எடுத்து சென்றிருக்க முடியாது என எண்ணிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலக சாலைகளில் இருந்த சிசிடிவிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்..

அப்போது, குடோனில் இருந்த 125 பண்டல்களும் குட்டி யானை வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டது தெரியவந்த நிலையில், இதற்கெல்லாம் திட்டம் வகுத்து கொடுத்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவை துறையின் கள உதவியாளராக பணிபுரிந்த சரவணன் என்பது வெளிச்சத்திற்கு வந்தது...

சம்பவம் நடந்த குடோனில், கடந்தாண்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அப்போது பல வேட்டி சேலைகள் தீயில் கருகியதாகவும், அதில் மிஞ்சிய வேட்டிகள் தான் இவையெனக் கூறி சுமார் 15 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரத்து ஐநூறு வேட்டிகளையும், துணி வியாபாரிகளிடமே சரவணன் விற்றது அம்பலமாகியிருக்கிறது...

சரவணன் உட்பட மதுரை நெல்பேட்டையை சேர்ந்த சுல்தான் அலாவுதீன், சாகுல் ஹமீது, இப்ராகிம் ஷா மற்றும் செல்லூரை சேர்ந்த குமரன், மதிச்சியத்தை சேர்ந்த மணிகண்டன் என 6 பேர் வழக்குபதிவு செய்த போலீசார், இதில் நால்வரை கைது செய்த நிலையில், களவு போன 12 ஆயிரத்து ஐநூறு வேட்டிகளையும் பறிமுதல் செய்தனர்....

தலைமறைவாக உள்ள சரவணன் மற்றும் சுல்தான் அலாவுதீன் ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வரும் நிலையில், சரவணன் கைது செய்யப்பட்ட பிறகே இதன் முழு விபரங்களும் தெரியவரும் என கூறப்படுகிறது...

இதனிடையே, இந்த சம்பவத்தின் மூலம் போலீசாருக்கு மேலும் ஒரு சந்தேகம் வலுப்பெற்று மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது...

சம்பவ குடோனில் கடந்தாண்டு ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 68 லட்சம் மதிப்புள்ள வேட்டி, சேலைகள் தீயில் கருகி சேதமடைந்தன...

இதன் பின்னணியில் இந்த திருட்டு கும்பலின் சதி இருக்குமோ என சந்தேகம் அடைந்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அரசு ஊழியர் சரவணனை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்