தமிழக அரசின் நடவடிக்கைக்கு நீதிபதி பாராட்டு

x

நெல்லையைச் சேர்ந்த நாகூர் கனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தன் மீது கஞ்சா கடத்தியதாக கடந்த 2018-ஆம் ஆண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து, தனக்கு சொந்தமான வாகனத்தை பறிமுதல் செய்ததாகவும், அதற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தனது வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். இதில், போதை பொருள் தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் விவரங்களை அளிக்க போதை ஒழிப்பு கமிட்டி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளரா? என தமிழ்நாடு டிஜிபி-க்கு கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.செந்தில்குமார், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறைப்படுத்த சிறப்பு அதிகாரி பெனாசிர் ஃபாத்திமா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இவ்வழக்குகளில் 3 ஆயிரத்து 688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதில் 2 ஆயிரத்து 787 வாகனங்களை யாரும் உரிமை கோரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் மாதம் 21-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்