TNPSC தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை - திருப்பி அனுப்பிய ஆளுநர்

x

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவை பரிந்துரை செய்துள்ள விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட்டதா என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.

டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு, tnpsc தலைவர் பதவிக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. டிஎன்பிஎஸ்சியில் மேலும் 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்கும் தகுதி வாய்ந்தவர்களின் பெயர்களை தமிழக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்கிறது . இந்த நிலையில் தமிழக அரசு அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில், சைலேந்திரபாபு பரிந்துரை தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு மீண்டும் தமிழக அரசுக்கு கோப்பை திருப்பி அனுப்பி இருக்கிறார். அதில், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட்டதா? எனவும், உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட்டதா? என்றும் ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு தமிழக அரசு உரிய பதிலை அளித்து, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனாலும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை என கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட இருக்கிறார் என்ற தகவலை , கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதியே தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்