தமிழ்நாடு ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன்? - ஒரு சிறப்பு தொகுப்பு

இந்த வருடம், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகம் சார்பாக அலங்கார ஊர்தி இடம்பெற வாய்ப்பில்லை என்பது உறுதி ஆகியிருக்கிறது.
x
இந்நிலையில், ஊர்தி நிராகரிக்கப்பட என்னதான் காரணம் என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 150வது ஆண்டை முன்னிட்டு அலங்கார ஊர்தியின் வடிவமைப்பு மாதிரியில், வ.உ.சி உருவம் இடம் பெற்றிருந்தது. ஆனால் தேர்வுக் குழு, இதனை ஏற்கவில்லை எனவும், அவர் வணிகர் தானே என்ற அடிப்படையிலேயே தேர்வு குழுவின் பார்வை இருந்துள்ளது எனவும் கூறுகின்றனர். இதனையடுத்து இடம் பெற்றிருந்தவர் வேலு நாச்சியார். ஜான்சிராணி வாள் வீசுவதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவர் அவர். இருப்பினும் அவரது உருவத்துடன் இடம் பெற்ற குதிரையின் நிறத்தை பழுப்பு நிறத்தில் மாற்ற வேண்டும் என தேர்வு குழு சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், தூக்கிலிடுவது போல இடம் பெற்ற மருது சகோதரர்களின் உருவத்தை அவர்கள் ஏற்கவில்லை எனவும் பாரதியாரின் உருவத்தை ஏற்று கொண்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி தமிழக அரசு தரப்பில் ஊர்தியின் சொல்ல வரும் கருத்துக்கும், தேர்வு குழு கருத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்துள்ளது. மூன்று சுற்றுகளில் தேர்வு குழு தெரிவித்த மாற்றங்களை தமிழக அதிகாரிகள் ஏற்ற போதிலும், முகப்பில் வ.உ.சி., உருவம் இருப்பதை மத்திய குழு ஏற்காத நிலையில், அவரது 150வது பிறந்த நாள் என்ற அடிப்படையில் அந்த உருவத்தை வைத்ததாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில்தான் ஊர்தி நிராகரிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி, சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம் பெறும் எனவும். தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்த ஊர்தியை சிறப்பாக வடிவமைக்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு, ஒன்று அல்லது இரண்டு ஊர்திகளாக வடிவமைக்கலாமா என ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்