ஈபிஎஸ் முன்னாள் உதவியாளர் கைது

வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டு உள்ளார்.
x
வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டு உள்ளார். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர், கடந்த 20 ஆண்டுகளாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, தன்னிடம் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, மணி மீது சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி, அதிமுகவை சேர்ந்த செல்வகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்துக்கு மணி வரவில்லை. தொடர்ந்து மணியும் செல்வகுமாரும் தலைமறைவாகினர். அவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், கடந்த 1 மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த மணியை, பண்ணை இல்லத்திற்கு வரும் வழியில் தனிப்படை போலீசார் அதிகாலை கைது செய்தனர். மேலும், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்