எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொடூர கொலை - தாயிடம் தன்னை பற்றி சொன்னதால் வெறிச்செயல்

திருச்சி அருகே சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொடூர கொலை - தாயிடம் தன்னை பற்றி சொன்னதால் வெறிச்செயல்
x
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக வேலை பார்த்து வந்தவர் பூமிநாதன். சம்பவத்தன்று நள்ளிரவு இவர் ரோந்து பணியில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் ஆடு ஒன்றை திருடிச் செல்வதை நேரில் பார்த்துள்ளார். உடனடியாக அவர்களை பிடிக்க பூமிநாதன் சென்ற போது அந்த கும்பலும் வேகமெடுத்தது. ஆனாலும் விடாமல் துரத்திச் சென்ற பூமிநாதன், தன்னுடன் வேலை பார்த்த ஏட்டு சித்திரைவேலையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சித்திரைவேல், திடீரென பாதை மாறிவிட, புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் கேட் வரை பூமிநாதன் அந்த ஆடு திருடும் கும்பலை துரத்திச் சென்றுள்ளார். 

மழை நீரால்  ரயில்வே சுரங்கப்பாலம் மூடியிருக்கவே, அதற்கு மேல் செல்ல முடியாமல் பள்ளத்துப்பட்டியில் பூமிநாதனிடம் வசமாக சிக்கியது அந்த கும்பல். பின்னர் 3 பேரையும் சுற்றி வளைத்த பூமிநாதன், அவர்களை மண்டி போட வைத்துள்ளார். அப்போது சித்திரைவேலுக்கு போன் செய்த பூமிநாதன், தான் இருக்கும் இடத்தை பற்றி தகவல் சொன்னதோடு மேலும் சிலரையும் அழைத்து வருமாறு கூறியுள்ளார். பிடிபட்ட கும்பலை பற்றி அப்போது அவர்களிடம் சொன்னதாகவும் தெரிகிறது. இதனிடையே பிடிபட்ட மணிகண்டன் என்பவரின் வீட்டு செல்போன் எண்ணை வாங்கி அவரின் தாயிடம் பேசியிருக்கிறார் பூமிநாதன். 

தோகூர் பகுதியை சேர்ந்த 19 வயதான மணிகண்டன், 9 வயதான தன் அக்கா மகன், 14 வயது சிறுவனுடன் சேர்ந்து ஆடு திருடியதும் அப்போது  தெரியவந்தது. இதனை அறிந்த பூமிநாதன், மணிகண்டனின் தாயிடம் அவரைப் பற்றி 23 நிமிடங்கள் பேசியிருக்கிறார். தன் தாயிடம் தன்னை திருடன் என சொல்கிறாரே என கோபமடைந்த மணிகண்டன், தான் வைத்திருந்த கத்தியால் பூமிநாதனை பின்னந்தலையில் வெட்டியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சிறுவர்கள் 2 பேரும் உதவவே, பூமிநாதனை கொலை செய்து விட்டு தப்பியது அந்த கும்பல். கொள்ளை மற்றும் கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வந்தது. இதனிடையே பூமிநாதன் ஏற்கனவே செல்போனில் சொன்ன தகவல்கள் மற்றும் ஆடு திருடும் கும்பல் குறித்து விசாரித்த போது சிக்கினார் மணிகண்டன். 

அவரின்  செல்போன் எண் மற்றும் கொலை நடந்த இடத்தில் கிடந்த கத்தி ஆகியவை போலீசாருக்கு துருப்பாக அமையவே அவர்கள் விசாரணையை துரிதப்படுத்தினர். கொலை செய்ய அவர்கள் பயன்படுத்தியது கறிக்கடையில் பயன்படுத்தும் கத்தி என்பதும் தெரியவந்தது. இதனிடையே அந்த கும்பல், புதுக்கோட்டை - சிவகங்கை மாவட்ட எல்லையில் இருப்பது உறுதியான நிலையில் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் பூமிநாதன் கொலை வழக்கில் பல உண்மைகள் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்