ஜாமீன் பெற்று தருவதாக ரூ.200 கோடி மோசடி: சிறையில் இருந்து கொண்டே சுகேஷ் கைவரிசை

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி ரோஹிணி சிறையில் இருந்தவாறே அரங்கேற்றிய 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில், இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிக்கியது எப்படி என்பதை பார்க்கலாம்...
ஜாமீன் பெற்று தருவதாக ரூ.200 கோடி மோசடி: சிறையில் இருந்து கொண்டே சுகேஷ் கைவரிசை
x
கடந்த 2017 ஆம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை மீட்க டி.டி.வி. தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சுகேஷ் சந்திரசேகர் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பிரபலங்களுக்கு மிகவும் நெருக்கமானவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு பல மோசடிகளை அரங்கேற்றிய ஒரு மோசடி பேர்வழி என தெரியவந்தது.

இதனையடுத்து டெல்லி ரோஹிணி சிறையில் அடைக்கப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், மீண்டும் 200 கோடி ரூபாய்க்கு பண மோசடியை அரங்கேற்றிய தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஷிவிர்ந்தர் மோகன் சிங்கிற்கு, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி ஜாமின் வாங்கி தருவதாக அவருடைய மனைவி அதிதி சிங்கிடம் கைவரிசையை காட்டியுள்ளார்.  

இந்த 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில், கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சுகேசுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப்பிரிவினர் சோதனையை மேற்கொண்டனர். சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அவருக்கு சொந்தமான பங்களாவில் நடத்தப்பட்ட சோதனையில், 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து சுகேஷ் சந்திரசேகரின் காதலியும், பிரியாணி பட நடிகையுமான லீனா மரியாவை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். லீனா மரியா உதவியுடன் சுகேஷ் இந்த மோசடியை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.

சிறையில் தொழில்நுட்ப வசதியுடன் தன்னுடைய அடையாளத்தை மறைத்து சுகேஷ் யார் யாரிடமெல்லாம் பேசியிருக்கிறார் என அமலாக்கப்பிரிவு ஆய்வை மேற்கொண்டது.

அப்படி அவர் பேசிய நபர்களில் ஒருவர் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் இறுதியில் ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், அவரிடம் பண மோசடி வழக்கு குறித்து 5 மணி நேரம் விசாரணையை மேற்கொண்டனர்.

இதனையடுத்து மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கப்பிரிவு கோரிய நிலையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆஜராகவில்லை.

ஜாக்குலின் பெர்னாண்டசிடமும், தன்னை ஒரு பிரபலமாக அடையாளப்படுத்தி சுகேஷ், கைவரிசையை காட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்