சமூகநீதி - கண்காணிக்க குழு அமைக்க முடிவு

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூகநீதி - கண்காணிக்க குழு அமைக்க முடிவு
x
சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்  அனைத்து சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற அடித்தளத்தில் சமூகநீதி அரசாணை வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். சமூகநீதி அரசாணை வெளியிடப்பட்டு நூறு ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 16-ஆம் நாளான இன்று வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சமுதாய சீர்திருத்த மருத்துவர்களான நடேசனார், டி.எம்.நாயர், கடலூர் ஏ.சுப்பராயலு, பனகல் அரசர், எஸ்.முத்தையா, பி.டி.இராஜன் ஆகியோரை நினைத்து பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சமூகநீதிப் பயணத்தின் அடுத்தகட்டத்தை இன்று முதல் திமுக அரசு அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது என்றும்,  ஆனால் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசால் ஒரு குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு , பதவி உயர்வு, நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக, முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும்; வழிகாட்டும்; செயல்படுத்தும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சரியாக நடைமுறைப்படுத்த படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும் என்றும், அதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், இக்குழுவில்  அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்