மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று

தான் மறைந்தாலும் தன் கவிகளால் சாகா வரம் பெற்ற முண்டாசுக் கவிஞன் பாரதியின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று.
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று
x
தான் மறைந்தாலும் தன் கவிகளால் சாகா வரம் பெற்ற முண்டாசுக் கவிஞன் பாரதியின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று... அவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...


"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்...அதை ஆங்கோரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்...வெந்து தணிந்தது காடு...தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ..." என்று கனல் தெறிக்கும் வார்த்தைகளால் சுதந்திரத் தீயை மூட்டியவர் தான் பார"தீ"...

எட்டயபுரம் மண்ணில் பிறந்த தமிழ்க் கவிஞன் சுப்பிரமணியனுக்கு பிறப்பிலேயே கிடைத்த கவிப்புலமையைப் பாராட்டி, எட்டயபுர மன்னன் சூட்டிய பெயர்தான் "பாரதி"...

பேரைக் கேட்கும்பொழுதே, நரம்புகளைப் புடைக்க வைக்கும் அசாத்திய மாய ஆற்றல் மீசைக் கவிஞனின் வரிகளுக்கு உண்டு...

இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவ ராசிகளையும் பார்த்து வினவுவதாய் அவர் எழுதிய பாடல்தான் நிற்பதுவே...நடப்பதுவே...

எழுதும் ஒவ்வொரு வரியிலும்...வார்த்தையிலும் தத்துவம்...பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ விஷயங்களை நாம் பார்க்கிறோம்...பாடம் படிக்கிறோம்...ஆனால் அவற்றின் உண்மைத் தன்மைதான் என்ன...மெய்யாலுமே அவை மெய்தானா...இல்லை வெறும் காட்சிப் பிழைகளா என்ற அவரின் வினாவில் தான் எத்தனை ஆழம்...

மனித இனத்தில் சாதிப்பிரிவினைகளை ஒழிக்க கத்தி கொண்டு சண்டை செய்யவில்லை பாரதி...மாறாக "தகரென்று கொட்டு முரசே...பொய்மைச் சாதி வகுப்பினை எல்லாம்..."என்று தன் வார்த்தைகளைக் கொண்டு போர் தொடுத்தார்....

மீசைக் கவிஞனுக்கு தமிழின் மீது அலாதி ஆசை...தேனினும் இனிய ஓசையுடைய தமிழைத் தான் மட்டும் கேட்டால் எப்படி...தரணி முழுவதும் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத் தான்..."தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று பொதுநலத்தோடு பாடினார்...

வீரமும் காதலும் தமிழர்க்கு அழகு...வீரமிகு பாடல்கலை எழுதிய பாரதிக்கு கண்ணம்மா மீது கொண்ட காதல் அளப்பறியது..."நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா..." என்று பாடலிலே தெரிந்திருக்கும், அழியும் உடலை பூமிக்கும், அழியா ஆன்மாவை கண்ணம்மாவுக்கும் பாரதி ஒப்படைத்து விட்டான் என்று...கண்ணம்மா வெறும் கற்பனை அல்ல...பாரதியைப் பொறுத்தவரை அவள் சூறையமுது...

தான் நாட்கணக்கில் பட்டினி கிடந்தாலும், "தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று உலக உயிர்களின் பசியைப் பொறுக்க முடியாமல் உலகை அழிக்க புறப்பட்டான்...

தன் விருப்ப தெய்வமான சக்தியிடம், "வல்லமை தாராயோ...இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே..." என்று பாடி வாழ்நாள் முழுவதும் தனக்காக எதுவும் கேட்காமல் தன்னலமற்று வாழ்ந்து மறைந்தார்...


Next Story

மேலும் செய்திகள்