தந்தையை போலீசார் தாக்கியதாக புகார் - விடிய விடிய போராட்டம் நடத்திய மகள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது, மாநில மனித உரிமை ஆணையம்.
x
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில்,  மீண்டும் அடுத்தடுத்து அதுபோன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருவது... காவல்துறை மீதான நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. அந்த வரிசையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரை சாதி பெயரை கூறி போலீசார் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கடந்த 17 ஆம் தேதி பிரான்சிஸ் என்பவரிடம் இருந்து 10 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அவரை காவல்நிலையம் வரவழைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் நிலையில், பலத்த காயமடைந்த பிரான்சிஸ்,  செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 
ஏழை குடும்பம் என்பதால் தங்களால் என்ன செய்ய முடியும் என கூறி போலீசார் தந்தையை தாக்கியுள்ளதாக கூறும் அவரது மகள் அபிதா, தங்களை போன்றவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராட்ட களத்தில் குதித்ததாக தெரிவிக்கிறார். சாதி பெயர் சொல்லி தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மருத்துவமனையின் எதிரே உள்ள செல்போன் டவர் மீது ஏறி 6 மணி நேரம் போராட்டம் நடத்தினார், அபிதா... 
பின்னர் சம்பந்தப்பட்ட இரண்டு போலீசாரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, தனது போராட்டத்தை அபிதா கைவிட்டார்.ஆனால், தம்மிடம் போலீசார் பேரம் பேசி, மிரட்டியதால் மீண்டும் மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டியின் மீது ஏறி போராட்டம் நடத்தியதாக கூறுகிறார், அபிதா... 
விடிய விடிய அபிதா நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட  உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் தனிப்பிரிவு காவலர் மஜித் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது... காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்... அதுவரை தனது போராட்டம் தொடரும் என்றும் அபிதா தெரிவிக்கிறார்..தற்போது இந்த சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட கண்காணிப்பாளரை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது, மனித உரிமை ஆணையம். 
தந்தி டிவி செய்திகளுக்காக தென்காசியில் இருந்து செய்தியாளர் முரளிதரன்.. 




Next Story

மேலும் செய்திகள்