அப்பவே அப்படி... தமிழகத்தின் சுவாரஸ்ய முதல்வர்கள்

சட்டப் பேரவையை கடந்து நாடாளுமன்றத்திலும் தடம் பதித்த முதல்வர்கள், எம்எல்ஏ ஆகாமலேயே முதல்வர் பதவியை வகித்தவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.
அப்பவே அப்படி... தமிழகத்தின் சுவாரஸ்ய முதல்வர்கள்
x
சட்டப் பேரவையை கடந்து நாடாளுமன்றத்திலும் தடம் பதித்த முதல்வர்கள், எம்எல்ஏ ஆகாமலேயே முதல்வர் பதவியை வகித்தவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.

சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாமல் முதல்வர் பதவிக்கு வந்தால், புறவாசல் வழியாக வந்தவர் என எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது வழக்கம். சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத் தேர்தலை தொட்ர்ந்து, பதவியேற்ற முதல் முதல்வரே, புறவாசல் வழியாக வந்தவர்தான் என்பது தெரியுமா?

அந்த தேர்தலில் கம்யூனிஸ்டு தலைமையிலான  கூட்டணி அதிக இடங்களை பிடித்த போதிலும்,  தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற காங்கிரஸ் சார்பில் முதல்வரானார் ராஜாஜி. அதற்காக, பேரவை உறுப்பினராக இல்லாத அவரை,  எம்எல்சியாக நியமித்தார், அன்றைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா. அது அன்றைய அரசியலில், பெரும் சர்ச்சையை கிளப்பியது.

1967ம் ஆண்டில், நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டுக்கும் தேர்தல் நடைபெற்றபோது, பேரவைக்கு போட்டியிடாமல் மக்களவைக்கு போட்டியிட்டார், அண்ணா. தேர்தல் முடிவில், தென்சென்னை மக்களவை தொகுதி எம்பியாக அவர் வென்ற நிலையில், மாநிலத்தில் திமுக ஆட்சியை பிடித்திருந்தது. இதனால், எம்பி பதவியை உதறி விட்டு, முதல்வர் பதவியை ஏற்றார். அப்போது அவர் எம்எல்ஏ கிடையாது. அதன்பிறகு, அன்றைய சட்ட மேலவை உறுப்பினராக தேர்வானார்.

எம்ஜிஆர் மறைந்ததும், 1988ம் ஆண்டு ஜனவரியில் அவரது மனைவி ஜானகி அம்மாள் தமிழக முதல்வரானார். தமிழகத்தின் முதலாவது பெண் முதல்வர் அவர்தான். 23 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்த அவர், சட்டப்பேரவை உறுப்பினராக ஒருபோதும் இருந்தது இல்லை.

1954ம் ஆண்டில் முதல்வர் பதவியை காமராஜர் ஏற்றபோது, ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவை தொகுதி எம்பியாக இருந்தார். அதை உதறிவிட்டு முதல்வரான அவர், அதன் பிறகு குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆனார்.

காமராஜரைப் போலவே, நாடாளுமன்ற எம்பியாகவும் இருந்த தமிழக முதல்வர்கள் பலர் உண்டு. அவர்களில் முதன்மையானவர் அண்ணா.   முதல்வராகும் முன் 1962 முதல் 1967 வரை மாநிலங்களவை எம்பியாக இருந்தார் அண்ணா.

அண்ணாவைப் போலவே மாநிலங்களவை எம்பியாக இருந்த மற்றொரு முதல்வர் ஜெயலலிதா. அவர் 1984 முதல் 1989 வரை எம்பியாக இருந்தார். நாடாளுமன்றத்தில் அண்ணா அமர்ந்த இருக்கை எண்ணும் ஜெயலலிதா அமர்ந்த இருக்கை எண்ணும் ஒன்று தான். 

காமராஜர், அண்ணா, ஜெயலலிதாவைப் போலவே,  எம்பியாக இருந்த மற்றொரு முதல்வர் யார் தெரியுமா? 

தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக இருந்தார், எடப்பாடி பழனிசாமி.

சரி... தமிழ் நாட்டில் பல முதல்வர்கள் இருந்திருக்கிறர்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் பல ருசிகரமான தகவல்கள் இருக்கின்றன. ஆனால், தமிழகத்தின் ஒரே இடைக்கால முதல்வர் யார் தெரியுமா? அவர்தான் நெடுஞ்செழியன். திராவிட இயக்கங்களின் மூத்த தலைவர். 

1967ம் ஆண்டு அண்ணா மறைந்தபோது ஐந்து நாட்களும் 1984ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக எம்ஜிஆர் சென்றபோது இரண்டரை மாதங்களும் 1987ல் எம்ஜிஆர் மறைந்தபோது 12 நாட்களும் இடைக்கால முதல்வராக பதவியில் அமர்ந்திருக்கிறார். 

தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை அடுத்தடுத்த நாட்களின், அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்