தோற்றத்தால் வசீகரிக்கும் லட்சுமி - சற்று பெரிய தந்தத்துடன் காட்சி தரும் லட்சுமி

புதுச்சேரிக்கு வந்த முதல் யானை என பெயர் பெற்ற லட்சுமி, தேக்கம்பட்டி யானைகள் முகாமில் கொள்ளை கொள்ளும் அழகியாக வலம் வருவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தோற்றத்தால் வசீகரிக்கும் லட்சுமி - சற்று பெரிய தந்தத்துடன் காட்சி தரும் லட்சுமி
x
கஜமுகனை கம்பீரமாக வைத்து அழகு பார்க்கும் கோயில்களுள் ஒன்று, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில். அசாமில் பிறந்து கேரளாவில் வளர்ந்த இந்த யானை, புதுச்சேரிக்கு வந்து லட்சுமியானாள். 6 வயதில் கோயிலுக்கு சுட்டிக் குழந்தையாக வந்த இவளுக்கு, புதுச்சேரிக்கு வந்த முதல் யானை என்ற பெருமையையும் உண்டு. வயது 30 என்றாலும் கூட, அதே 6 வயது குழந்தை துறுதுறுப்பை லட்சுமியிடம் பார்க்க முடியும். புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோரை தன் சேட்டைகளால் கவர்ந்திழுப்பதில் லட்சுமி, கெட்டிக்காரி. பாகன்கள் செந்தில்குமார், சக்திவேல் ஆகியோர் லட்சுமியை தங்கள் பிள்ளைகளை போலவே நடத்தி வருவதும், அப்பாவின் சொல்பேச்சு கேட்பது போல லட்சுமி நடந்து கொள்வதும் கவிதை...

கோயிலில் நடக்கும் அனைத்து உற்சவ நிகழ்வுகளிலும் லட்சுமி தான் கதாநாயகி. உற்சவருக்கு பூஜை நடக்கும் அதே நேரத்தில் லட்சுமிக்கும் பூஜைகள் நடக்கும். சாதுவானவள் என பெயரெடுத்த லட்சுமிக்கு பிடித்த உணவுகள் ஏராளம்... கூந்தல் பனை, மூங்கில் இலை, அத்தி, பலா இலை, தென்னை ஓலை என நேசித்து புசிக்கிறாள், லட்சுமி. அதேநேரம் சோளமாவு, கொள்ளுமாவு, ராகி மாவு, சாதம், சம்பா பொங்கல் என கொடுத்தாலும் ஒரு கை பார்த்து விடுவாளாம் என்கிறார், பாகன் செந்தில்குமார். 10 வருடங்களாக முகாமில் கலந்து கொள்ளும் லட்சுமிக்கு பிடித்த தோழிகள் 3 பேர். சங்கரன்கோவில் யானை கோமதி, மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை, ஒப்பிலியப்பன் கோயில் யானை பூமா என 3 பேரும் லட்சுமியின் இதயத்தில் இடம் பிடித்தவர்கள். 

முகாமிற்கு வந்து இவர்கள் 3 பேரையும் பார்த்துவிட்டால் லட்சுமிக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஒன்றாக குளியல் மேடைக்கு சென்று ஷவரில் குளிப்பது, பாகன் கொடுக்கும் உணவை சாப்பிடுவது என எல்லாவற்றிலும் தோழிகள் 4 பேரும் ஒன்றாகவே இருப்பதை இங்கே காண முடியும். அதேபோல் முகாமில் உள்ள விநாயகரை மண்டியிட்டு வணங்கி தும்பிக்கையை உயர்த்தி வழிபடும் காட்சிகள் காணக்கிடைக்காத அற்புதம். பொதுவாக பெண் யானைகளுக்கு தந்தம் அத்தனை பெரிதாக இருக்காது. ஆனால் லட்சுமி அதிலும் மாறுபட்டவள். சற்று பெரிய சைஸ் தந்தத்துடன் லட்சுமி கம்பீர நடை போடுவது பேரழகின் சாட்சி.

Next Story

மேலும் செய்திகள்