அப்பவே அப்படி...எம்.எல்.ஏ.வான முதல் நடிகர்

சட்டப்பேரவை கனவில் உலா வரும் திரையுலகினர் மத்தியில் முதன் முறையாக எம்எல்ஏ ஆன நடிகர் ஒருவரை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
அப்பவே அப்படி...எம்.எல்.ஏ.வான முதல் நடிகர்
x
சட்டப்பேரவை கனவில் உலா வரும் திரையுலகினர் மத்தியில் முதன் முறையாக எம்எல்ஏ ஆன நடிகர் ஒருவரை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

திரையுலகில் காலடி வைத்ததுமே அடுத்து சட்டசபை தான் என்ற கனவுடன் உலா வரும் நடிகர்களின் காலம் இது. 

ஆனால் சட்டப் பேரவைக்குள் நுழைவது அவ்வளவு எளிதல்ல. தமிழகத்தில் முதன் முறையாக சட்டப் பேரவைக்குள் நுழைந்த நடிகர் யார் தெரியுமா? அவர் தான் லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர்.

எஸ்எஸ்ஆரின் தந்தை சூரிய நாராயண தேவரும் முத்து ராமலிங்க தேவரும் நண்பர்கள். அவருக்கு ராஜேந்திரன் என்ற பெயரை சூட்டியவரே தேவர் தான். அதாவது, பிறக்கும்போதே அரசியலுடன் பிறந்தவர் எஸ்எஸ்ஆர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி தான் இவருக்கும் முதல் படம். திராவிட இயக்க கொள்கைகளில் மிக தீவிரமான ஈடுபாடு கொண்டவர் எஸ்எஸ்ஆர்.

திராவிட இயக்கத்தின் மீது கொண்ட கொள்கை காரணமாக புராண, இதிகாச படங்களில் நடிப்பதில்லை என உறுதியாக இருந்தவர், எஸ்எஸ்ஆர். அதனாலேயே 'லட்சிய நடிகர்' என்றே அழைக்கப்பட்டார், இந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர்

பேரறிஞர் அண்ணா மீதான ஈர்ப்பால் திமுக பிரசார மேடைகளிலும் முழங்கியவர் எஸ்எஸ்ஆர். திமுகவை பொறுத்தவரை எம்ஜிஆருக்கெல்லாம் சீனியர் இவர்தான். 1957ம் ஆண்டில் முதன் முறையாக தேர்தல்களத்தில் திமுக புகுந்தபோது தேனி தொகுதியில் எஸ்எஸ்ஆர் களம் இறங்கினார். ஆனால் தோற்றுப் போனார்.

1957ம் ஆண்டு தேர்தலில் தோற்றாலும் அதே தேனி தொகுதியில் இருந்து 1962ம் ஆண்டு தேர்தலில் வென்று திமுக எம்எல்ஏவாக பேரவைக்குள் நுழைந்தார் எஸ்எஸ்ஆர். அவர்தான் தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்த முதல் நடிகர். 

அண்ணாவின் மிகத் தீவிரமான ஆதரவாளர். தன்னுடைய வீட்டு நிகழ்ச்சிகளை அண்ணா இல்லாமல் நடத்தியதே இல்லை. கிரக பிரவேசம் என்ற வார்த்தை கூட புதுமனை புகுவிழா என மாறியது எஸ்எஸ்ஆர் வீட்டு நிகழ்ச்சியில் தான். அப்படி அழகு தமிழில் மாற்றியவர், அண்ணா.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பதவியிலும் இருந்திருக்கிறார் எஸ்எஸ்ஆர். அதிமுக ஆரம்பித்த பிறகு எம்ஜிஆருடன் சேர்ந்த எஸ்எஸ்ஆர், 1980ம் ஆண்டு பேரவை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து அதிமுக சார்பாக எம்எல்ஏ ஆனார். அந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் எஸ்எஸ்ராஜேந்திரன் தான். 

அதற்கு அடுத்த 1984ம் ஆண்டு தேர்தலில், அமெரிக்காவில் இருந்தபடியே எம்ஜிஆர் வென்றது, இதே ஆண்டிப்பட்டி தொகுதியில்தான்.

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என திராவிட இயக்க முதல்வர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த எஸ்எஸ்ஆர். 2001 வரை ஐம்பது ஆண்டு காலம் நடிப்பையும் தொடர்ந்திருக்கிறார், முதல்வராகவும் நடித்திருக்கிறார்.

தமிழக சட்டப் பேரவையில் நுழைவதற்கு எஸ்எஸ்ஆர் போட்டு வைத்த பாதையில், பயணம் செய்த திரை பிரபலங்களை பற்றிய தகவல்களை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்