அப்பவே... அப்படி... 5 ஆண்டில் 3 முதல்வர்கள்

அரசியல் என்றாலே, அதன் கூடவே கோஷ்டி கானமும் ஒலிக்கத் தவறுவதில்லை. அதற்கு தமிழகம் மட்டும் விதிவிலக்கா என்ன..?
அப்பவே... அப்படி... 5 ஆண்டில் 3 முதல்வர்கள்
x
அரசியல் என்றாலே, அதன் கூடவே கோஷ்டி கானமும் ஒலிக்கத் தவறுவதில்லை. அதற்கு தமிழகம் மட்டும் விதிவிலக்கா என்ன..? பார்க்கலாம், இந்த தொகுப்பில்....

தமிழகத்தில் 1937ம் ஆண்டிலேயே முதலாவது சட்டப்பேரவை தேர்தல் நடந்தாலும் இரண்டாம் உலகப் போர் காரணமாக, இரண்டாவது சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப் போடப்பட்டது 

ஏழாண்டு கால ஆளுநர் ஆட்சிக்குப் பின், 1946ம் ஆண்டில் சென்னை மாகாண சட்டப் பேரவைக்கு இரண்டாவது பொதுத் தேர்தல் நடந்தது. அதில் 163 இடங்களுடன் வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி. தேர்தலில்,  இரண்டாவது இடத்தை காயிதே மில்லத் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி பிடித்தது.

ஆட்சியமைப்பதற்கு  காங்கிரஸ் கட்சி தயாரானபோது  கோஷ்டிப் பூசலும் கூடவே தலை தூக்கியது. ராஜாஜியை சென்னை மாகாண முதல்வராக்க வேண்டும் என்பது காங்கிரஸ் மேலிடத்தின் விருப்பம்

ஆனால், காந்தி மற்றும் நேருவின் இந்த முடிவை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. தமிழகத்தில் இருந்து காமராஜரும் கேரளாவை சேர்ந்த மாதவ மேனனும் ராஜாஜியை கடுமையாக எதிர்த்தனர்.

இறுதியாக புதிதாக வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முதல்வரை தேர்வு செய்யலாம் என முடிவானது. அதன்படி தேர்வானவர், டி.பிரகாசம். அவரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சென்னை மாகாணத்தின் முதல்வராக முடியாத நிலையில், ராஜாஜிக்கு வேறொரு பதவி கிடைத்தது.

சுதந்திர இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரல் அவர்தான். அந்த பதவிதான், அதன்பிறகு,  குடியரசு தலைவர் பதவியாக மாறியது.

டெல்லி அரசியல் பக்கம் ராஜாஜி சென்ற பிறகும் சென்னை மாகாணத்தை ஆண்ட காங்கிரசுக்குள் கோஷ்டி பூசல் ஓய்ந்தபாடில்லை. 

மறு ஆண்டே பிரகாசம் பதவி விலகினார். இதையடுத்து, 1947ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். அவர்தான் சுதந்திர இந்தியாவின் முதலாவது தமிழக முதல்வர்.

சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அரசினர் தோட்டத்துக்கு சூட்டப்பட்டிருப்பது அவரது பெயர்தான்.
கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்கு வகித்த, பன்னோக்கு மருத்துவமனைக்கும் அவர் பெயர்தான் என்பதும் கூடுதல் தகவல்

ஓமந்தூராரும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சென்னை மாகாண முதல்வராக இருந்தார்.

அவருக்கு பின், 1949ம் ஆண்டில் குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் இரண்டாவது தமிழக முதல்வர் அவர்.

இப்படியாக காங்கிரஸ் கோஷ்டி பூசலால் ஐந்தே ஆண்டுகளில் மூன்று முதல்வர்களை பார்த்தது சென்னை மாகாணமாக இருந்த அன்றைய தமிழகம்.

ஆங்கிலேயர் கொண்டு வந்த அரசமைப்பு சட்டப்படி, சென்னை மாகாணத்தில் அமைந்த கடைசி அரசும் அதுதான். 

அதன் பிறகு இன்று வரையிலும் நடைபெற்று வரும் தேர்தல்கள் அனைத்துமே  சுதந்திர இந்தியாவின் புதிய அரசியலமைப்பு சட்டப்படி நடப்பவையே

Next Story

மேலும் செய்திகள்