அப்பவே... அப்படி... தமிழக சட்ட பேரவையின் பாரம்பரியம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றின் சுவடுகளை திருப்பிப் பார்க்கும் சிறப்பு தொகுப்பில், முதலாவது பேரவை தேர்தல் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
அப்பவே... அப்படி... தமிழக சட்ட பேரவையின் பாரம்பரியம்
x
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றின் சுவடுகளை திருப்பிப் பார்க்கும் சிறப்பு தொகுப்பில், முதலாவது பேரவை தேர்தல் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

 
இந்தியாவில் மிக நீண்ட பாரம்பரியம் மிக்க மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இதன் சட்டப் பேரவைத் தேர்தல் வரலாறு 1937ம் ஆண்டிலேயே துவங்குகிறது.

 
இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன்பாக, ஆங்கிலேய ஆட்சி காலத்தின்போது, ஜனநாயகத்தை அறிமுகம் செய்வதாக சொல்லி நடத்தப்பட்ட தேர்தல் அது.

 
பிரிட்டிஷார் கொண்டு வந்த, 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் படி, இந்த தேர்தல் நடந்தபோது, சென்னை மாகாணமாக இருந்தது, தமிழகம்.

 
அந்த தேர்தலில் அனைவருக்கும் ஓட்டுரிமை கிடையாது. வயது தவிர, சொத்து, படிப்பு என ஓட்டுரிமைக்கென சில தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. 

 
இந்தியா முழுவதும் பல்வேறு மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை தமிழகம், மலபார், இன்றைய ஆந்திரா, கர்நாடகாவின் சில பகுதிகள் இடம் பெற்றிருந்தன. 

 
அவ்வாறு வரையறுக்கப்பட்டிருந்த சென்னை மாகாணத்தில் அமைந்த சட்டப்பேரவையின் மொத்த இடங்கள் 215. இந்தியா முழுவதும் மாகாண அளவில் 1937ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. அதுதான் முதலாவது சட்டப்பேரவை தேர்தல்.

 
இந்த தேர்தலில், சென்னை மாகாணத்தில் இருந்த 215 இடங்களில் 159 இடங்களை சுதந்திர போராட்ட களத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. 

 
பல தொகுதிகளில் இருந்து பலரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் காமராஜரும் ஒருவர். சாத்தூர் தொகுதியில் இருந்து அவர் தேர்வானார். அதாவது, தமிழகத்தின் முதலாவது சட்டப் பேரவையிலேயே அடியெடுத்த வைத்த பெருமை காமராஜருக்கு உண்டு.

 
தேர்தல் முடிவுகளுக்கு பின் மிகப்பெரிய  டுவிஸ்ட் அரங்கேறியது. மாகாண ஆளுநர்களுக்கே அதிகபட்ச அதிகாரம் இருப்பதாக கூறி, தான் வெற்றி பெற்ற மாகாணங்களில் எல்லாம் ஆட்சியமைக்க மறுத்தது, காங்கிரஸ் கட்சி. மாநில ஆளுநர்களுக்கு எதிரான குரலை 1937ம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சி துவக்கி வைத்தது சுவாரஸ்யம். அது, அன்றைய பிரிட்டிஷ்  ஆளுநர்கள் என்பது மட்டும்தான் வித்தியாசம்

 
ஆளுநர் அதிகாரத்துக்கு எதிரான இந்த பிரச்சினையால், இரண்டாம் இடத்தை பிடித்த  கட்சியை ஆட்சியமைக்க அழைத்தது ஆங்கிலேய அரசு. அந்த வகையில், சென்னை மாகாணத்தில் 21 இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த நீதிக் கட்சிக்கு ஜாக்பாட் அடித்தது. அந்த கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார், ஆளுநர்.

 
நீதிக்கட்சி என்பது திராவிட இயக்கங்களின் தாய்க் கட்சி. அந்த வகையில் தமிழகத்தின் முதலாவது ஆட்சியே திராவிட இயக்க ஆட்சிதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தேர்தலில் நீதிக்கட்சியின் தலைவர் பொப்பிலி ராஜா தோற்றுப்போனதால், அந்த கட்சியின் வெங்கட ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார்.  அவர்தான் தமிழக சட்டப்பேரவையின் முதலாவது முதல்வர். திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவரான ஏ.டி.பன்னீர் செல்வம். எம்ஏஎம் முத்தையா செட்டியார் போன்றோர் அவரது அரசில் அமைச்சர்களாகினர்

 
1937ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமைந்த இந்த ஆட்சி நான்கு மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதற்குள்  காங்கிரஸ் தலைமைக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே ஆளுநர் அதிகார விஷயத்தில்  உடன்பாடு எட்டப்பட்டது. இதனால், ஆட்சியமைக்க காங்கிரஸ் சம்மதிக்க, ராஜாஜி முதல்வரானார். 1937ம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை மாகாண சட்டப்பேரவையின் இரண்டாவது அரசு காங்கிரஸ் தலைமையில் அமைந்தது.  

தமிழக சட்டப் பேரவை தேர்தல் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இன்னும் பல சுவாரஸ்யங்கள் புதைந்து கிடக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் அவற்றை பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்