மருத்துவர் சாந்தா காலமானார்

புற்றுநோய் மருத்துவ நிபுணரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
x
புற்றுநோய் மருத்துவ நிபுணரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. 

இருதயநோய் சம்பந்தமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் மருத்துவர் சாந்தா. தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். தற்போது மருத்துவர் சாந்தாவின் உடல் அடையாறு மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஏழைகள், பின்தங்கிய மக்களுக்காக சேவை வி.சாந்தா பணிகளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர்

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க எடுத்த நடவடிக்கைகளுக்காக, மருத்துவர் சாந்தா நினைவு கூறப்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  சென்னை அடையரில் உள்ள புற்றுநோய் நிறுவனம் ஏழைகளுக்கும் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கும்  சேவை செய்வதில் முன்னணியில் உள்ளதாக பிரதமர் தமது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார். மருத்துவர் சாந்தாவின் மறைவு செய்தி கேட்டு துக்கம் அடைந்ததாகவும்,  அவரின் ஆன்மா சாந்தியடையட்டும் எனவும் அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மருத்துவர் வி.சாந்தா மறைவு -நிர்மலா சீதாராமன் இரங்கல்

அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் வி.சாந்தா தற்போது நம்மிடையே இல்லை எனவும், ஏழைகள் மற்றும் தேவை​ப்படுவோரின் நலனுக்காக தம் வாழ்க்கையை அற்பணித்து, புற்று நோயை குணப்படுத்தும் ஒற்றை நோக்கத்துடன், மருத்துவமனை வளாகத்திற்குள் ஒரு அறையில் வசித்து வந்தவர் சாந்தா என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் ​புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த மருத்துவர் சாந்தா  ஒரு புனிதர் என்றும், தற்போது அவர்  நம்மிடையே இல்லை என்றாலும், அவரது பணிகளை இருகரம் கூப்பி வணங்குவதாக நிர்மலா சீதாராமன் தமது பதிவில் தெரிவித்துள்ளார். 

நோயாளிகளிடம் சாந்தா காட்டிய பரிவு  அளப்பறியது -அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்

சென்னை அடையாறு புற்று நோய் மையத்தின் தலைவர் வி. சாந்தா மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமது 67 ஆண்டுக்கால  பணிவார்வில், புற்று நோயை குணப்படுத்தும் அவரது அன்றாட போராட்டமும், நோயாளிகளிடம் அவர் காட்டிய பரிவும்  அளப்பறியது என அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் நம்மை விட்டு மறைந்தாலும் நமது இதங்களில் வாழ்வார் என்றும், இந்த துறையை சார்ந்தவர்களுக்கு மருத்துவர் வி. சாந்தா தொடர்ந்து முன்மாதிரியாக திகழ்வார் எனவும், அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

சாந்தா மறைவு -  மு.க. ஸ்டாலின் இரங்கல்
"இன்னொருவரை காண்பது அரிது" 
"ஈடு செய்ய முடியாத பேரிழப்பு" 

மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு தி.மு.க. சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் டாக்டர் சாந்தாவை போல் இன்னொருவரை இந்தியாவில் மட்டுமல்ல - உலகத்திலேயே காண்பது அரிது என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகள் சம்பளமே பெறாமல் தன்னலமற்ற சேவை  ஆற்றியவர் என்றும்,  கடந்த 66 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு மிகுந்த சேவையாற்றியவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அங்குள்ள ஒவ்வொரு செங்கல்லும், மருத்துவர் சாந்தாவின் புகழ் பாடும் என்றும், மனித நேயக் காவலரை இன்றைக்கு மருத்துவத் துறை இழந்திருப்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மருத்துவர் சாந்தா மறைவு - வைகோ இரங்கல்
"புற்றுநோய் என்றால்  சாந்தா பெயர் நினைவுக்கு வரும்"
"மருத்துவ அறத்துடன் இயங்கினார்"

தமிழக மகளிருக்குப் பெருமை சேர்த்த மருத்துவர் சாந்தா இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் யாருக்கேனும் புற்றுநோய் என்று தெரிய வந்தால், உடனடியாக அவர்கள் நினைவுக்கு வருவது சாந்தா என்ற பெயர்தான் என்றும், அந்த அளவிற்கு பொறுப்புடனும், கடமை உணர்ச்சியுடனும் தொண்டு ஆற்றி இருக்கின்றார் என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார். 
டாக்டர் சாந்தாவுக்கு பணம் ஒரு பொருட்டு அல்ல, மருத்துவ அறத்துடன் இயங்கினார் என்றும் வைகோ தெரிவித்துள்ளார். 

மருத்துவர் வி.சாந்தாவின் பணி வாழ்வு - தி.மு.க. எம்.பி. கனிமொழி புகழாரம்

புற்று நோய் நிபுணரும், அடையாறு புற்று நோய் மையத்தின் தலைவருமான மருத்துவர் வி.சாந்தா மறைவு செய்தி ஆழ்ந்த வருத்தம் அளித்ததாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள கனிமொழி, சாமானிய மக்களுக்கும் தரமான புற்று நோய்க்கான சிகிச்சை கிடைக்கும் ஒரு வசதியை இந்த சமூகத்துக்கு உருவாக்கி தந்து சென்று உள்ளதாக கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார். மருத்துவர் சாந்தாவின் பணி வாழ்க்கை, வருங்கால சமூதாயத்திற்கும் நம் அனைவருக்கும் நிச்சயமாக ஒரு முன்மாதிரியாக விளங்கும் எனவும் கனிமொழி தமது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு மறைந்த புற்றுநோய் மருத்துவர்  வி.சாந்தா வி.சாந்தா - நடிகர் விவேக் இரங்கல்

தன்னலமற்ற வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு மறைந்த புற்று நோய் மருத்துவ நிபுணரும் அடையார் புற்றுநோய் மருத்துவ மையத்தின் தலைவருமாக இருந்து மறைந்த மருத்துவர் வி.சாந்தா என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.தன் வாழ்நாள் முழுவதையும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவே அர்ப்பணித்த சாந்தா அம்மையாரின் வாழ்வு 94 -வது அகவையில் நிறைவுற்றது என நடிகர் விவேக் தமது பதிவில் தெரிவித்துள்ளார். 

ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர் சாந்தா - தமிழச்சி தங்கபாண்டியன் தகவல்

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான மருத்துவர் சாந்தா  மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.  ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர் சாந்தா என புகழாரம் சூட்டியுள்ளார். அவரின் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி உள்ள தமிழச்சி தங்கபாண்டியன்,  அவரின் இழப்பு மருத்துவ துறைக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்றும், அவரை இழந்து வாடுகின்ற குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும்  அனுதாபத்தையும் தமது பதிவில் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

"சாந்தா உடலுக்கு அரசு மரியாதை" - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

மருத்துவர் சாந்தாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இறுதி சடங்குகளின் போது காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவர் சாந்தா உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்ததாக அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களில் இருந்து வரும் வறிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் அடையாறு புற்று நோய் சிசிச்சை மையத்தின் மனித நேய கொள்கை பாராட்டிற்குரியது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்