கருத்தரிக்காமல் நாடகம் என வெளியான அம்பலம் - குழந்தை இல்லாததால் ஏற்பட்ட விரக்தியா?

கர்ப்பமானதாக நாடகமாடியதோடு, தனக்கு பிறந்த குழந்தையை அரசு மருத்துவமனை ஊழியர்கள் கடத்திவிட்டதாக திருப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் நடத்திய நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்...
கருத்தரிக்காமல் நாடகம் என வெளியான அம்பலம்  - குழந்தை இல்லாததால் ஏற்பட்ட விரக்தியா?
x
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் மந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி சசிகலா. இவர்கள் 2 பேரும் திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்து தங்கள் குழந்தை எங்கே? என அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் என்னவென்று விசாரித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக அலிபிரி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அப்போது போலீசாரிடம் சுரேஷ் - சசிகலா தம்பதியர்  அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தான், கடந்த 2ஆம் தேதி திருப்பதி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்ததாகவும், 16ஆம் தேதி பிரசவத்திற்கு வருமாறு மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஊரார் முன்னிலையில் சீமந்த நிகழ்வு நடத்தப்பட்டு பின்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார். பிரசவ வலி தனக்கு வந்ததாகவும், அதன்பிறகு சலைன் ஏற்றிவிட்டு மருத்துவர்கள் தனக்கு பிரசவம் பார்த்ததாகவும், பின்னர் தன்னுடைய குழந்தை எங்கே என கேட்ட போது செவிலியர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுவதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தன்னுடைய குழந்தையை அரசு மருத்துவமனை ஊழியர்கள் கடத்தி விற்பனை செய்துவிட்டதாக அவர் கண்ணீர் விட்டு கதறினார். ஆனால் போலீசார் மருத்துவமனை ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சொன்ன தகவலோ போலீசாரையே கிறுகிறுக்க வைத்தது. கடந்த 2ஆம் தேதி சசிகலா மருத்துவமனை வந்தது உண்மை தான். ஆனால் அவர் கருவுற்றிருக்கிறாரா? என்பதை சோதனை செய்ய வந்ததாகவும், ஆனால் அவர் எந்த விதமான பரிசோதனைகளையும் எடுக்காமலே சென்றுவிட்டதாக கூறியது மருத்துவமனை தரப்பு.டெஸ்ட் கூட எடுக்காமல் சென்ற பெண், இப்போது குழந்தை எங்கே என கேட்டு வீண்பழி சுமத்துவதாகவும், குழந்தையே பெறாத ஒரு பெண் இப்படி நாடகம் ஆடுகிறார் என்பது மருத்துவமனை தரப்பின் வாதம்.இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சசிகலாவை திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் சசிகலா நடத்தியது அத்தனையுமே நாடகம் என தெரியவந்தது. 5 மாத கர்ப்பிணியாக இருந்த சசிகலாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கரு கலைந்துள்ளது. இதற்காக அவர் நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் கரு கலைந்ததை நம்பாத அவர், தான் இன்னமும் கர்ப்பமான பெண் என்றும், தனக்கு குழந்தை பிறந்ததாகவும் எண்ணியுள்ளார். குழந்தை இல்லாத விரக்தியில் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு போதிய மனநல சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்