சிறுவர்களிடம் பணத்தை பறிகொடுத்த வயதான தம்பதி முதியவர்களுக்கு உதவுவது போல நடித்து திருட்டு - ரூ.3.29 லட்சம் திருடிய சிறுவர்கள்

ஊரடங்கால் தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு எத்தனையோ தொண்டு நிறுவனங்களும், தனி நபர்களும், அரசியல் கட்சியினரும் தங்களால் முடிந்த வரை உதவி வருகின்றனர்...
சிறுவர்களிடம் பணத்தை பறிகொடுத்த வயதான தம்பதி முதியவர்களுக்கு உதவுவது போல நடித்து திருட்டு - ரூ.3.29 லட்சம் திருடிய சிறுவர்கள்
x
கொடிய கொரோனா வைரசோடு போராடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்திலும்,  உதவுவது போல நடித்து லட்சக்கணக்கில் ஏமாற்றும் சம்பவங்களும் நிகழத்தான் செய்கின்றன.
இதற்கு உதாரணம்தான் நெல்லை பாளையங்கோட்டையில் நிகழ்ந்த இந்த சம்பவம்.. பாளையங்கோட்டையில் தன் மனைவியுடன் தனியாக வசித்துவருபவர் சங்கரநாராயண‌ன். ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை பணியாளர். கொரோனா ஊரடங்கால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அந்த தம்பதி, அவ்வப்போது காய்கறி, மளிகை சாமான்களை வாங்கி தந்து செல்லும் பக்கத்து வீட்டு சிறுவர்களை தங்கள் பேரக்குழந்தைகளாகவே பாவித்து வந்தனர். ஒரு கட்டத்தில் தங்கள் ஏ.டி.எம் கார்டை கொடுத்து தேவையான பொருட்களை வாங்கி வரும்படி கூறும் அளவிற்கு சங்கரநாராயண‌ன் சிறுவர்களை நம்பியுள்ளார். இந்த நிலையில், திடீரென ஒருநாள் வங்கி கணக்கை சரிபார்த்தபோது, சிறுக சிறுக சேர்த்து வைத்த 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மாயமானதை கண்டு அதிர்ந்து போனார்.
இதையடுத்து  கடந்த ஜூன் 18 ஆம் தேதி பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் சங்கர‌நாராயண‌ன் புகார் அளித்தார்.போலீசாரின் விசாரணையில், பக்கத்துவீட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன்களான இரண்டு சிறுவர்களே பணத்தை திருடியது தெரிய வந்த‌து. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை திருடி அப்படி என்னதான் செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரித்த போது, இதில் மற்றொரு நபரின் தொடர்பும் இருப்பது தெரிய வந்த‌து. 2 சொகுசு சைக்கிள்கள் , விலை உயர்ந்த செல்போன்கள், விதவிதமான உடைகள் என ஆடம்பரமாக பணத்தை செலவு செய்த சிறுவர்கள், மீதி தொகையை ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், அவர்கள் தூண்டுதலின் பேரிலேயே இவ்வளவு பெரிய தொகையை சிறுவர்கள் திருடி இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்