கீழ்பாக்கம் மனநல காப்பகத்துக்கு பரவிய கொரோனா தொற்று - 800 நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ள 800 நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
இதுதொடர்பாக, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அனைத்து வித மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், அதன் மாநில செயலாளர் நம்புராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்டு உள்ள நிலையில், மற்றவர்களுக்கு சோதனை நடத்த மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனநல காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்து வருவதாகவும், எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் முத்துகுமார் தெரிவித்தார். 
ஆனால், மனநல காப்பகத்தில் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிறப்பு கவனம் வழங்க வேண்டியது அவசியம் என்பதையும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களால் தான் அவர்களை நன்றாக கவனிக்க முடியும் எனவும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்தினார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள்,  மனநல காப்பகத்தில் சிகிச்சையில் உள்ள 800 பேருக்கு மட்டுமல்லாமல், மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டன்கள், சமையல்காரர்கள் என அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

ஒரு வாரத்தில் இந்த பரிசோதனைகளை முடிக்க வேண்டுமெனவும், அதில் கிடைக்கும் முடிவுகளை பொறுத்து எந்த மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதை அரசு முடிவெடுக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்