பெற்றோரின் சொத்தை நூதன முறையில் அபகரிக்க முயன்ற மகள் : ஆட்சியர் தலையிட்டு சொத்தை மீட்டார்

பெற்றோரின் சொத்து, உடன் பிறந்தவர்களுக்கு கிடைக்காத வகையில், நூதன முறையில் எழுதிக்கொண்ட 2-வது மகளிடம் இருந்து, சொத்தை மீட்டு பெற்றோரிடமே ஒப்படைத்த திருவள்ளூவர் மாவட்ட ஆட்சியருக்கு மூத்த தம்பதிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் சொத்தை நூதன முறையில் அபகரிக்க முயன்ற மகள் : ஆட்சியர் தலையிட்டு சொத்தை மீட்டார்
x
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 68-வயதான ராஜா. மீன் வியாபாரியான இவருக்கு 60 லட்சம் மதிப்பீட்டில் வீடு ஒன்று உள்ளது. இந்த நிலையில் அவரது மனைவி கலைச்செல்விக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவச்செலவிற்கு வீட்டை விற்குமாறு அவரது மூன்று மகள்களும் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ராஜா, அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் விற்பனைக்காக பேசி முன்பணமாக 5 லட்சம் வாங்கியுள்ளார். அதே போல் மீண்டும் 5 லட்சம் வாங்கி, மகள்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் கொடுத்த நிலையில், மீதமுள்ள பணத்தை விஜயகுமாரிடம் கேட்டுள்ளார். அப்போது,  முதியவர் ராஜாவிடம் அவர் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மீதி பணத்தை கேட்ட போது அந்த நிலம் ராஜாவின் 2-வது மகள் யமுனா பெயரில், விஜயகுமார் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, மற்ற பிள்ளைகளுக்கு சொத்து கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், சிகரம் சேவா மையத்தை அணுகியுள்ளார். இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய ஆட்சியர் மூன்று மகள்கள் மற்றும் அவரது பெற்றோர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் 2-வது மகள் பெயரில் எழுதப்பட்ட சொத்தை தந்தை ராஜா பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்துக்கொடுத்தார். சொத்தை மீட்டுக்கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு மூத்த தம்பதிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்