கோடிக்கணக்கான நிதிகளை நதிகளில் கொட்டுவதால் பலன் உண்டா?

கூவம், அடையாறு, பக்கிங்காம் நதிகள் 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடிகளை கொட்டினால் கூவம் சுத்தமாகி விடுமா? இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
x
அரசர்கள் காலத்திலும், ஆங்கிலேயர்  காலத்திலும், தலைநகர் சென்னையில் பாய்ந்தோடும் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் நதிகளில் மக்கள் போக்குவரத்தும், வணிக போக்குவரத்தும் நடந்திருக்கிறது. 

காலப்போக்கில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மூன்று நதிகளிலும் கழிவுநீர் கலந்து, இன்று சென்னை மாநகரின் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 

கூவம் ஆறு, திருவள்ளூர் மாவட்டம், கேசவரம் என்ற அணையில் இருந்து துவங்குகிறது. சென்னை வரையிலான 72 கிலோ மீட்டர் துாரத்தில், ஆக்கிரமிப்புகளும், திருவேற்காடு பகுதியில் இருந்து அதிகளவில் கழிவு நீரும் இந்த ஆற்றில் கலக்கின்றன.

இதேபோல், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் இருந்து துவங்கும் பக்கிங்காம் நதியும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. அடையாறு நதியும் தப்பவில்லை! 

இப்படி, கழிவு நீர்களின் புகலிடமாகவும், நோய்களை பரப்பும் மையங்களாகவும் விளங்கும் இந்த மூன்று நதிகளையும் சுத்தப்படுத்த, முந்தைய அரசுகள் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டியுள்ளன.  ஆனாலும் மூன்று நதிகளும் தொடர்ந்து துர்நாற்றம் வீசிக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் செலவில் கூவம் உள்ளிட்ட 3 நதிகள் தூய்மைப்படுத்தப்படும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது.  

இப்படி, தொடர்ச்சியாக பல ஆயிரம் கோடி ரூபாயை, நதிகளில் கொட்டுவதால் பலன் கிடைக்குமா? இதில் உள்ள பிரச்சினைகள் தான் என்ன?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 3 நதிகளையும் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக கூறும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன்,  ஆனால் பின்னால் வந்த அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

கழிவு நீர் கலப்பு, ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்டவற்றை செய்தாலே மழை பெய்யும் போது நதிகள் தானாகவே சுத்தமாகி விடும் என கூறுகிறார் நீரியல் மேலாண்மை நிபுணர் ஜனகராஜன்.

முதலில் நிபுணர் குழுவை அமைத்து, முறையாக, முழுமையாக ஆய்வு செய்து, அதற்கேற்ப திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்கள், நீரியியல் மேலாண்மை வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்