ஆடி அமாவாசை தினம் - காவிரி கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையை ஒட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
x
ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்தால், அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.இதன்படி, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள், பூஜைகள் செய்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். 

ராமேஸ்வரம் - பல்லாயிரக்கணக்கானோர் திதி கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில்  தங்களது முன்னோர்களுக்கு திதி அளிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தமிழகம் மட்டுமல்லாது, வட மாநிலங்களில் இருந்தும்குவிந்த மக்கள், அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடலில் குவிந்து முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். பின்னர் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இங்கு பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் -  முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையை ஒட்டி, திருவையாறு காவிரிக்கரையில் தண்ணீர் இல்லாததால், ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.   திருவையாறு காவிரிக்கரையில் உள்ள புஷ்ப மண்டபத்துறையில் ஆண்டுதோறும் காவிரியில் நீராடி மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால், ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டது. இதையடுத்து, அதில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி அளித்து வழிபாடு செய்தனர்.

காசிக்கு நிகரான காமேஸ்வரம் - ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு திதி

ஆடி அமாவாசையை ஒட்டி, காசிக்கு நிகராக புண்ணியம் தருவதாக கருதப்படும் காமேஸ்வரத்தில், ஏராளமான மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வங்க கடலில் புனித நீராடினர். காமேஸ்வரம் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு பிடித்த காய்கறி மற்றும் உணவுகளை படைத்தும், எள், நவதானியம் வைத்து யாகம் செய்தும் திதி கொடுத்தனர். திதி கொடுத்த பின்னர் வங்கக்கடலில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

கும்பகோணம் - ஆடி அமாவாசையை முன்னிட்டு  முன்னோருக்கு திதி

ஆடி அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணம்  மகாமக குளத்தில் முன்னோருக்கு திதி கொடுக்க அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கும்பகோணம் வந்த மக்கள்  அதிகாலை 4 மணி முதலே மகாமக குளத்தின் அருகே  திரண்டனர். பின்னர் மகாமக குளத்தில் நீராடி காய்கறிகள் மற்றும் அரிசி உள்ளிட்ட பூஜை பொருட்களை படையலிட்டு தங்கள் முன்னோர்களை வணங்கி திதி கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மகாமக குளத்தில் நீராடி வடகரையில், நவ கன்னியர்கள் அருள்பாலிக்கும் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வழிபாடு நடத்தியதோடு,  அகத்தி கீரை வாங்கி மாடுகளுக்கு பக்தர்கள்  கொடுத்தனர்.



Next Story

மேலும் செய்திகள்