ஏ.சி.யில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்க முடியுமா...?

ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்கும் முயற்சியில் சென்னையை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.
x
தமிழகமெங்கும் தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து நின்ற போது ஒரு குடம் தண்ணீருக்காக விடிய விடிய காத்து நின்ற மக்கள் ஏராளம்... தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும், இருக்கும் நீரை எப்படி உபயோகமாக செலவழிப்பது என்பதும் இங்கே அவசியமான ஒன்று. அந்த வகையில் தான் சென்னை வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளனர். இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் உள்ள ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாவதை பார்க்க முடியும். அந்த தண்ணீரை எப்படி உபயோகமாக மாற்றலாம் என இவர்கள் யோசித்து அதை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 86 வயதான விஸ்வநாதன் என்பவரே இந்த முயற்சிக்கு விதை போட்டுள்ளார். ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றிய இவர், ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்கும் முயற்சியில் முனைப்புடன் இறங்கினார். அடுக்குமாடி குடியிருப்பில் 40 ஏ.சி. யூனிட் உள்ள நிலையில் ஒரு மணி நேரம் ஏசியை பயன்படுத்தினால் சுமார் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கும். 8 மணி நேரம் ஏசியை பயன்படுத்தும் போது நாளொன்றுக்கு சுமார் 900லிட்டருக்கும் மேலாக நீர் கிடைப்பதால் இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த திட்டமிட்டார். சேகரிக்கப்பட்ட தண்ணீரை கிண்டியில் உள்ள தனியார் ஆய்வகத்தில் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது அந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தலாம் என தெரியவந்தது. இந்த தண்ணீரை தங்கள் உபயோகத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதே விஸ்வநாதனின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி. இதனை குடிநீராக்க யோசித்தாலும், வீட்டு உபயோகத்திற்கு பேருதவியாக இருப்பதாகவும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கூறுகிறார்கள். அதேநேரம் இதுபோல் கிடைக்கும் தண்ணீரை உரிய சோதனைக்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறையை மற்ற குடியிருப்பு வாசிகளும் பின்பற்றி நீரை சேமிக்கும் முயற்சியில் இறங்கினால் கூடுதல் நன்மையே.

Next Story

மேலும் செய்திகள்