ஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க ஊர்மக்கள் ஒன்று கூடி புதிய செயலை செய்துள்ளனர்.
குடியாத்தம் அருகே உள்ள கொல்லகுப்பம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களது குடிநீர் தேவைக்காக 5 ஆழ்துளை கிணறுகளை அமைத்தனர். அனைத்திலும் கடந்த சில மாதங்களாக தண்ணீர் இல்லாததால் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர். இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொது மக்களுடன் இணைந்து மழை நீரை ஆழ்துளை கிணறுகளில் சேமிக்க முடிவு செய்தனர். அவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் கிராமத்தின் தெருக்களில் கால்வாய்கள் தோண்டினர். அவற்றின் மூலம் மழை நீரை சேமிக்கும் வகையில் 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்கு பக்கத்தில் பெரிய பள்ளம் தோண்டி பிவிசி பைப்புகளை புதைத்தனர். அதன் மேல் சிறு சிறு குழாங்கற்களையும் கருங்கல்லையும் கொட்டி சேற்றுடன் கலந்து வரும் மழை நீர் வடிகட்டி கிணற்றுக்குள் செல்லுமாறு அமைத்தனர். அண்மையில் பெய்த கனமழையால் கிணற்றில் தண்ணீர் சென்றது. இதை கண்டு கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழைநீர் சேகரிப்பால் அருகில் உள்ள விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதே போல் பிற கிராமங்களிலும் மழைநீர் சேகரிப்பில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினால் குடிநீர் பிரச்சினை வராது என்று கொல்லகுப்பம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story