மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா?...அதிமுக தலைவர்களிடையே போட்டி...

பிரதமராக 2வது முறையாக மோடி இன்று பதவி ஏற்க உள்ளார். அவரது அமைச்சரவையில், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா?...அதிமுக தலைவர்களிடையே போட்டி...
x
1998  ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் அதிமுக இடம்பெற்றது. அதன்பின்னர் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற்றதில்லை. 20 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த வாய்ப்பு உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிஜூ ஜனதா தளம், சிரோமணி அகாலிதளம், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, அதிமுக, பா.ம.க, மதிமுக, உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தது.

அதிமுக சார்பில் வாஜ்பாய் அமைச்சரவையில் தம்பிதுரை , சேடப்பட்டி முத்தையா ,கடம்பூர் ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்றனர். அதை தொடர்ந்து அதிமுக முன்வைத்த சில கோரிக்கைகளை நிறைவேற்றாததால், 13 மாதங்களுக்கு பிறகு அ.தி.மு.கவின் ஆதரவை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விலக்கிக்கொள்ள, எதிர்கட்சிகளின் கோரிக்கையின் அடிப்படையில் வாஜ்பாய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்  வாஜ்பாயின் அரசு ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைக் கண்டது. அதன்பின்னர் 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அமைச்சரவையில் திமுக இடம்பெற்றிருந்தது. 

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் களம் கண்ட அதிமுக கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி தொகுதிகள் நீங்கலாக 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இருந்த போதிலும் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறவில்லை. கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான தம்பிதுரைக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பா.ஜ.க., தே.மு.தி.க, பா.ம.க, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைந்தது. இதில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றார். 

இந்த முறை மோடி அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா என கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு இடம் கிடைக்கும்பட்சத்தில் அதை கைப்பற்ற அதிமுகவில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.தம்பிதுரை, வைத்திலிங்கம், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார், ஆகியோர் போட்டியில் உள்ள நிலையில், ரவீந்திரநாத் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என டெல்லி வட்டாரங்கள் உறுதிபடுத்தும் நிலையில்,  தமிழகத்தில் இருந்து அமைச்சராகப் போவது யார் என்பது இன்று மாலை தெரிந்து விடும்.

Next Story

மேலும் செய்திகள்