நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஆறு தமிழ் எழுத்தாளர்கள்...அரசியல் களத்தில் தமிழ் அறிவுலகின் குரல்கள்

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற, தமிழ் இலக்கியவாதிகள் ஆறு பேரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க உள்ளது.
நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஆறு தமிழ் எழுத்தாளர்கள்...அரசியல் களத்தில் தமிழ் அறிவுலகின் குரல்கள்
x
தமிழ் இலக்கியத்தையும், அரசியலையும் பிரிக்க முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற எழுத்தாளர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் களமிறக்கப்பட்ட கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

இவர்கள் அனைவரும், தமிழ் அறிவுலகின் சாலச்சிறந்த ஆளுமைகள். வரலாறு, அரசியல், கருத்து, பண்பாடு, தமிழக உரிமை என கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருப்பவர்கள். பெண்ணியம், தலித்தியம், ஈழத் தமிழ், தமிழ் வரலாற்று ஆய்வுகள், தமிழ்மொழி, கலாச்சார அடையாளங்களை உலக அரங்கிற்கு முன்னெடுத்து செல்வதில் இந்த ஆறு எழுத்தாளர்களும் தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள். 

எம்.பி-யாக தேர்வாகியுள்ள இந்த இலக்கியவாதிகள், சமூகத்தை சுற்றி நடக்கும் அநீதிகள், வன்கொடுமைகள் ஆகியவற்றுக்கு எதிராக குரல் எழுப்பி வருவதுடன், தமிழ் சூழல், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள், திருநங்கைகள் வாழ்வுரிமை குறித்து தங்கள் எழுத்துகளில் காத்திரமாக பதிவு செய்து வருபவர்கள். சமூக அக்கறை கொண்ட இந்த இலக்கியவாதிகள் நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் உரிமைக்காக குரல் எழுப்பி, சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகக் கூர்மையாக தொலைநோக்கு பார்வையுடன் தமிழ் சமூக பிரச்சினைகளை அணுகி, மாற்றத்தை விதைப்பார்கள் என்றே வாக்காளர்கள் இந்த இலக்கியவாதிகளை நம்பி இருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்