நாளை வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரம்

சென்னையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 3 மையங்களிலும், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.
நாளை வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரம்
x
தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள், கிண்டி பொறியியல் கல்லூரியிலும், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியிலும் எண்ணப்படவுள்ளன. நாளை காலை 8 மணிக்கு  வாக்கு எண்ணிக்கை துவங்குவதை ஒட்டி, அதற்கான ஏற்பாடுகள் மூன்று மையங்களிலும் செய்து முடிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதி ளுக்கான வாக்குகள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இரண்டு நுழைவாயில்கள் என, 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், அதிகாரிகள், தலைமை முகவர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு நுழைவாயிலும், முகவர்களுக்கு தனி நுழைவாயிலும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு செல்லக்கூடிய இடங்களில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன . சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களோடு மத்திய தொழில் பாதுகாப்பு மற்றும் கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு இன்று ஒருநாள் அவகாசம் இருப்பதால், வாக்கு எண்ணிக்கை மையங்கள் பரபரப்பாக காணப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்