கஜா புயல் நிவாரணம் - ரூ.1000 கோடி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரணம்,மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயல் நிவாரணம் - ரூ.1000 கோடி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
x
கஜா புயலையொட்டி தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 514 முகாம்கள் அமைக்கப்பட்டு 2 லட்சத்து 51ஆயிரத்து 674 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முகாம்களில் உள்ளவர்களுக்கு தேவையான உணவு , குடிநீர் வழங்கப்படுவதாகவும்,  குடும்பத்திற்கு  10கிலோ அரிசி,  வேட்டி,சேலை மற்றும் 1 லிட்டர் மண்ணெண்ணை வழங்கப்படும் நிலையில் கூடுதலாக ஒரு வேட்டி, சேலை மற்றும் 4 லிட்டர் மண்ணெண்னை வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்கள் , வீடுகளை இழந்தவர்கள், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார நிவாரணமாக ஒரு குடும்பத்திற்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், துணிமணிகள் , பாத்திர பண்டங்கள் வாங்க தலா 3 ஆயிரத்து 800 ரூபாயும் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கஜா புயலால் உயிரிழந்த 46 பேரின் குடும்பத்திற்கு நிவாரணமாக தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தாம் உத்தரவிட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், உயிரிழந்த கால் நடைகளுக்கும் நிவாரண உதவி அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 


கஜா புயலால் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10ஆயிரம் ரூபாயும் , பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4 ஆயிரத்து 100 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கஜா புயலால் சேதமடைந்த தென்னை பயிருக்கு நிவாரணமாக ஒருமரத்திற்கு 600 ரூபாயும், அவற்றை வெட்டி அகற்றிட மரத்திற்கு 500 ரூபாய் வீதம் ஆயிரத்து 100 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு 1 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 72ஆயிரத்து 100 ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 
நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும், கரும்பு, வாழை , காய்கறிகள், மலர்கள் போன்ற  பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இப்பயிர்களை மறுசாகுபடி செய்ய ஆகும் செலவில் 40 முதல் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆவின் நிறுவனம் மற்றும் நியாவிலைக்கடைகள் மூலம் பால் கிடைத்திட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், மின்வாரிய பணிகளை விரைந்து முடித்திட முதற்கட்ட 200 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணமாக முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டு மரங்களுக்கு 42 ஆயிரம் ரூபாயும்,  பகுதி சேதமடைந்த கட்டு மரங்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

முழுவதும் சேதமடைந்த எப்.ஆர்.பி படகுகள் மற்றும் வலைகளுக்கு 85 ஆயிரம் ரூபாயும் ,பகுதி சேதமடைந்த எப்.ஆர்.பி படகுகளுக்கு 30 ஆயிரம் ரூபாயும், முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு 5  லட்சம் ரூபாயும் பகுதி சேதமடைந்த விசைப்படகுகளுக்கு  3 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரணம்,  மற்றும் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் அதற்காக  ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கஜா புயல் பெரிய அளவில் சேதாரங்களை ஏற்படுத்தி உள்ளதால், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்குமாறு மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,  கஜா புயல் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்