ஆடி மாதம் களைகட்டும் மேல்மலையனூர் கோயில்

ஆடிமாதம் அம்மனுக்குரிய மாதம்... அம்மன் கோயில்களுக்கு எல்லாம் தலைமையகமாக திகழும் மேல்மலையனூரில் வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
ஆடி மாதம் களைகட்டும் மேல்மலையனூர் கோயில்
x
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி அருள்பாலிக்கும் தெய்வமாக இருக்கிறாள் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி. சிவபெருமானின் பித்தத்தை நீக்கிய தலம் என்னு மேல்மலையனூர் அழைக்கப்படுகிறது. இத்தலம் இன்றளவும் பில்லி சூனியத்தை போக்க உதவும் இடமாகவே  பக்தர்களால் பார்க்கப்படுகிறது.

பிரம்மனின் தலையை சிவன் வெட்டியதால் பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க பார்வதி தேவி மேல்மலையனூரில் புற்று வடிவில் அமர்ந்துள்ளார். அப்போது மேல்மலையனூர் வந்த சிவபெருமானுக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன்,  உணவிட்டபோது கீழே சிந்திய உணவை எடுக்க சிவனின் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கியுள்ளது. 

உடனே விஸ்வரூபம் எடுத்த அம்மன் கபாலத்தை காலால் மிதித்து அடக்கியதால் சிவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாக கூறப்படுகிறது. அப்போது அம்மனின் கோபத்தை தணிக்க தேவர்களும் முனிவர்களும் ஒன்று சேர்ந்து தேராக மாறி அதில் அம்மனை ஏற்றி சாந்தப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. அதன்பிறகு இன்றுவரை இங்கு தேரோட்டம் முடிந்த பிறகு தேரை மீண்டும் பிரித்து வைத்து விடுகிறார்கள். 

அதேபோல் பிரம்மனின் தலையை சிவன் வெட்டியதால் கோபமடைந்த சரஸ்வதி, என் கணவரைப் போல் நீயும் அகோரமாகி விடுவாய் என பார்வதிக்கு சாபம் கொடுத்ததால் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி இன்றளவும் அகோர தேவியாகவே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இந்த கோயிலுக்கு வந்தால் பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதாகவும், நிம்மதியான வாழ்க்கை சூழல் கிடைப்பதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

சிவபெருமானின் சித்த பிரமையை போக்கிய தலம் இது என்பதால் இங்கு வந்து வழிபட்டால் சித்தபிரமை, பில்லி, சூனியம் நீங்கும் என்பது  பக்தர்களின் நம்பிக்கை. அமாவாசை நாட்களில் இங்கு இதற்காக சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது. அங்காளம்மன் கோயில்களுக்கு எல்லாம் தலைமையகம் இது என்பதால் இங்கிருந்து புற்று மண் எடுத்து சென்று தான் மற்ற கோயில்களை கட்டுவதாகவும் கூறுகிறார்கள்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், சிறப்பு பூஜைகள் செய்தல் என விழாக்களும் அதிகம் நடக்கும். கோயிலின் நடை காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு போதிய தங்கும் விடுதிகள் இல்லை என்பது பக்தர்களின் மனவருத்தம். விழுப்புரம் செஞ்சி வழியாக மேல்மலையனூரை வந்தடையலாம்...  சென்னையிலிருந்து திண்டிவனம் செஞ்சி வழியாகவும் வந்தாலும் அம்பாளின் தரிசனத்தை பெற முடியும்.

Next Story

மேலும் செய்திகள்