அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு - கூண்டோடு சஸ்பெண்ட்...பின்னணி என்ன?

x

இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்தது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணி பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்ட கொடியை உயர்த்தியது..

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக எம்பியான பிரிஜ் பூஷண் வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டினர்...

உலக தலைவர்களால் போற்றப்பட்ட வீரர் வீராங்கனைகள், தங்கள் சக வீராங்கனைகளுக்காக இரவு பகலாக கண்களில் கண்ணீருடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட நாட்களாக தொடர்ந்த போராட்டத்தால் இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவின் பேரில் தலைவர் பதவியில் இருந்து விலகினார் பிரிஜ் பூஷண்.

இதைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாகத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால கமிட்டி கவனித்தது.

இந்நிலையில் டெல்லியில் மல்யுத்த சம்மேளன நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்ட தேர்தலில், பிரிஜ் பூஷணின் ஆதரவாளரும், உத்திரப்பிரதேச மல்யுத்த சம்மேளனத்தின் துணைத்தலைவருமான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யபட்டார்.

இவருக்கு எதிராக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரன், போட்டியிட்ட நிலையில் 7 வாக்குகள் மட்டுமே பெற்று அவர் தோல்வியடைந்தார்.

அத்துடன் மற்ற 15 பதவிகளில் 13 பதவிகளை பிரிஜ் பூஷண் ஆதரவாளர்களே கைப்பற்றினர்.

இதன் மூலம் பல கட்ட போராட்டம் நடத்தியும் பிரிஜ் பூஷணின் பிடியிலேயே இந்திய மல்யுத்த சம்மேளனம் இருப்பதாக கருதிய மல்யுத்த வீரர் வீராங்கனைகள்..ஆதங்கத்துடன் கண்ணீர் வடித்தனர்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டே விலகுவதாக தெரிவித்த நிலையில், தன் பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்கப்போவதாக மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புன்யா மற்றும் வீரேந்திர சிங் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தேசிய அளவிலான யு -15, யு -20 மல்யுத்த போட்டிகள் இம்மாத இறுதிக்குள் உத்திரபிரதேசம் மாநிலம் நந்தினி நகரில் நடக்கும் என மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சஞ்சய் சிங் அறிவித்திருந்தார்.

ஆனால் விதிகளை மீறியதாக சஞ்சய் சிங் தலைமையிலான புதிய நிர்வாகிகள் குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் சஸ்பெண்ட் செய்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்