விலகும் நிர்வாகிகள்… சமாளிப்பாரா கமல்? - கமலின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியை சந்தித்த நிலையில், முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதாக அறிவித்து வருவது பற்றி விவரிக்கிறது இந்தத் தொகுப்பு…
x
ஊழல் ஒழிப்பு, அரசியல் மாற்றம் போன்ற முழக்கங்களுடன், மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018ல் தொடங்கினார், நடிகர் கமல்ஹாசன்.அதன்பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த மக்கள் நீதி மய்யம், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இருந்தபோதும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத மக்கள் நீதி மய்யம், பெற்ற மொத்த வாக்குகள் வெறும் 2 புள்ளி 45 சதவீதம் மட்டுமே… இந்த படுதோல்விக்கான காரணம் குறித்து ஆராய, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார், கமல். அப்போது கட்சியை சீரமைக்கும் பணியை செய்ய இருப்பதாகவும், அது மிகக் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில்தான், மக்கள் நீதி மய்யம் தொடங்கியதில் இருந்தே, கட்சியின் முக்கிய முகமாக பார்க்கப்பட்ட, துணைத்தலைவர் மகேந்திரன் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும், தங்களது பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பானது. இருப்பினும், கமலுடன் எப்போதும் துணை நிற்போம் என தெரிவித்து, பரபரப்பை ஓரளவிற்கு தணித்தனர். இதைத் தொடர்ந்து கமல் வெளியிட்ட அறிக்கையில், அரசியலை வியாபாரமாக பார்க்காமல், கடமையாகப் பார்ப்பவர்கள் மட்டுமே மக்கள் நீதி மய்யத்தில் தங்கி செழிக்க முடியும் என காட்டமாக குறிப்பிட்டிருந்தார். நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போதும், இந்த கட்சி எதன் காரணமாகவும் தன் பயணத்தை நிறுத்தாது என்றும், என் நேர்மையை சந்தேகித்தவர்களை சும்மா விடமாட்டேன் எனவும் கமல் அதிரடி கிளப்பினார். அதற்குள், கட்சியின் தலைமை நிலைய பொது செயலாளராக இருந்த, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, தனிப்பட்ட காரணங்களுக்காக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதேபோல், சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளரான பத்மப்ரியாவும், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கமல்ஹாசனை முதல்வர் முகமாக முன்னிறுத்தி களம் கண்ட மக்கள் நீதி மய்யம், மிகப்பெரிய தோல்வியை சந்தித்த சில வாரங்களில் முக்கிய நிர்வாகிகளையும் அடுத்தடுத்து இழந்து வருகிறது… 
இந்த சர்ச்சைகளை சமாளித்து, கட்சியின் கட்டமைப்பிற்கு மீண்டும் உயிரோட்டம் தருவாரா, கமல்? பொறுத்திருந்து பார்க்கலாம்… 



Next Story

மேலும் செய்திகள்