தேர்தல் அரசியலில் சுயேட்சைகளுக்கு இடம் இருக்கிறதா?

2019 நாடாளுமன்ற தேர்தலில் நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தல் அரசியலில் சுயேட்சைகளுக்கு இடம் இருக்கிறதா?
x
தேர்தல் அரசியலில் பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் மட்டுமே மக்களின் எண்ணத்தை முழுமையாக பிரதிபலித்துவிடுவதில்லை. இந்தியா போன்ற பல இன, கலாசார, நம்பிக்கையுள்ள மக்கள் வாழும் நாட்டில் அந்தந்த மக்களை பிரதிபலிக்கும் சிறிய இயக்கங்களுக்கு மட்டுமல்ல, சுயேட்சைகளுக்கும் ஒரு பங்களிப்பு இருப்பது அவசியம்.
முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952ஆம் ஆண்டிலும், அதற்கு அடுத்த தேர்தலான 1957-லும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேட்சை எம்.பிக்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் இருந்தது. 1952 தேர்தலில் 38 சுயேட்சை எம்.பிக்களும், அவர்களுக்கு 16 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. 1957-ல், முந்தைய தேர்தலை விட சற்று கூடுதலாக 42 சுயேட்சை எம்.பிக்களும், அவர்களுக்கு 19.4 சதவீத வாக்குகளும் பதிவாகின.

கான்பூரின் மிக பிரபலமான தொழிற்சங்க தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான எஸ்.எம்.பானர்ஜி, 1957, 1962, 1967, 1971 தேர்தல்களில் தொடர்ச்சியாக 4 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் இருந்து சென்று கேரள மக்களின் மகத்தான அன்பை பெற்று திருவனந்தபுரம் தொகுதியில் 1962ம் ஆண்டில் சுயேட்சையாக வெற்றி பெற்றவர், நடராஜ பிள்ளை.

இதேபோல், கேரளாவின் பாடகரா தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக வென்றவர், மற்றொரு தமிழரான ஏ.வி. ராகவன். கட்சிகளை கடந்த தனி நபர் செல்வாக்கு என்பது, 1970-க்கு பிறகு அரசியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. இன்றைய சூழலில், கட்சி என்ற மிகப்பெரிய அங்கீகாரம் இருப்பவர்கள் மட்டுமே ஜெயிக்க முடியும் என்கிற நிலைமை நிலவுகிறது. அதேபோல் ஒருவர் எவ்வளவு குற்றப்பின்னணி உள்ளவராக இருந்தாலும், திறமையற்றவராக இருந்தாலும் கட்சியில் வாய்ப்பு கிடைத்து விடுவதாலேயே எம்.பி. ஆகிவிடும் நிலையும் உள்ளது.

ஆனால் அதற்கு சிலர் விதிவிலக்காகவும் உள்ளனர். 2019 மக்களவை தேர்தலில், கர்நாடகத்தின் மாண்டியா தொகுதியில், சுயேட்சையாக களமிறங்கிய காங்கிரஸை சேர்ந்த மறைந்த நடிகர் அம்பிரீஷின் மனைவி சுமலதா, வெற்றி பெற்றார். மகாராஷ்டிராவில் சிவசேனாவின் பலமான வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான அட்சுல் ஆனந்தராவ் விதோபாவை, நடிகை நவநீத் கவுர், சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். பாஜகவிற்கு எதிராக பெங்களூரு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.

அசாமில் நபகுமார் சரணியா என்ற சுயேட்சை வேட்பாளர், தனி மாநிலம் கேட்டு போராடும் போடோலேண்ட் அமைப்பை தோற்கடித்துள்ளார். மற்றொரு சுயேச்சை வேட்பாளரும், மிக செல்வாக்குமிக்கவருமான மோகன்பாய் சன்ஜிபாய் டெல்கர், தாத்ரா நகர் ஹவேலி தொகுதியில் வென்றுள்ளார். விளம்பர ஆசையின் விபரீதமான முளைக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் எல்லா காலகட்டங்களிலும் இருக்கின்றனர். இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே மிகப்பெரிய பணக்காரர், பீகார் பாடலிபுத்திரா தொகுதி சுயேட்சை வேட்பாளர் ரமேஷ்குமார். இவரது சொத்து மதிப்பு 1,107 கோடி. தேர்தலில் இவர் வாங்கிய ஓட்டுகளோ, 1,558 மட்டும் தான். சில சுயேட்சைகள் குறைந்துபட்சம் நூறு ஓட்டுகள் கூட வாங்குவதில்லை. பிணை தொகையை அதிகரித்தும் இது மாதிரியானவர்களை தடுக்க முடியவில்லை. இன்றைய அரசியல் சூழலில், கட்சிகளை கடந்த தனிநபர் செல்வாக்கு என்பது ஏறத்தாழ காணாமல் ஆக்கப்பட்டுவிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்