இதுவரை இந்தியாவில் கூட்டணி அரசுகள்...

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு அமையும் எனவும் பிரதமர் யார் என தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கூட்டணி அரசுகள்...
x
இந்தியாவில், சுதந்திரத்துக்கு பிறகு நடைபெற்ற 5 தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்ற நிலையில், 1977ம் ஆண்டு நடைபெற்ற 6 ஆவது பொதுத்தேர்தலில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. ஜனசங்கம் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை கொண்ட முரண்பட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து  உருவாக்கிய 'ஜனதா கட்சி' 1977ம் ஆண்டில் ஆட்சியை பிடித்தது. ஜனதா என்ற தனி கட்சியாக இருந்தாலும், பல கட்சிகள் இணைந்த கூட்டணி அரசு தான். மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த ஜனதா அரசில் அதிமுக சார்பிலும் 2 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தனர். அந்த ஆட்சி இரண்டரை ஆண்டுகளில் கவிழ்ந்தது.

அதன்பிறகு, 1989ம் ஆண்டில், வி.பி.சிங் தலைமையில் 'தேசிய முன்னணி' என்ற கூட்டணி அரசை இந்தியா பார்த்தது. ஜனதா தளம், திமுக, அசாம் கணபரிஷத், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட கூட்டணி அது. இந்த கூட்டணி அரசில் திமுக சார்பாக முரசொலி மாறன், மத்திய அமைச்சரானார். விபி சிங் அரசை பாஜகவும் இடதுசாரி கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரித்தன. 

இந்த கூட்டணி அரசு 11 மாதங்களில் கவிழ, ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து ராஷ்டிரிய சமாஜ்வாடி ஜனதா கட்சியை தொடங்கிய சந்திரசேகர், ஆட்சிக்கு வந்தார். காங்கிரஸ் ஆதரவோடு, 6 மாதங்கள் மட்டுமே இவரது ஆட்சி நீடித்தது. அதன்பிறகு, 1996ம் ஆண்டில் ஜனதா தளம், சமாஜ்வாதி, அசாம் கன பரிசத், தெலுங்கு தேசம், தமாகா, திமுக, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி, ஆட்சியை அமைத்தது. இரண்டு ஆண்டுகளே நீடித்த இந்த கூட்டணி ஆட்சியின்போது, தேவகவுடா, குஜ்ரால் என இரண்டு பிரதமர்களை இந்தியா பார்த்தது. 

அதன்பிறகு, 1998ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. வாஜ்பாய் பிரதமரானார். இந்த கூட்டணி அரசில் அதிமுக, மதிமுக, பாமக,  சிவசேனா, அகாலிதளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த கூட்டணி அரசு 13 மாதங்களில் கவிழ்ந்ததால், 1999ல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. கூட்டணி ஆட்சிகள் நிலைப்பதில்லை என்பதால், 'காங்கிரஸ் மட்டுமே நிலையான ஆட்சியை தரும்' என்ற கோஷத்தோடு காங்கிரஸ், களம் இறங்கியது. 

ஆனால், 1999 தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சிக்கு வந்தது. வாஜ்பாய் தலைமையிலான அந்த அரசில் திமுக, மதிமுக, பாமக, சிவசேனா, அகாலிதளம், தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றன. இந்தியாவில் முதன் முதலில், 5 ஆண்டு பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்த கூட்டணி அரசு இதுதான். 13 கட்சிகளை கொண்ட கூட்டணியை வாஜ்பாய், திறமையாக கையாண்டார். 

அதன்பிறகு, 2004 மற்றும் 2009 தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. மன்மோகன் சிங் பிரதமரானார். இந்த கூட்டணியில் திமுக, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பாமக, மதிமுக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. 

இதில் சில கட்சிகள் வெளியேறியதோடு, அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு வாபஸ் என்ற சிக்கல்கள் எழுந்தபோதிலும், 10 ஆண்டு காலம் இந்த கூட்டணி அரசு நீடித்தது. 1996 முதல் கூட்டணி அரசுகளே இந்தியாவில் நீடித்து வந்த நிலையில், 2014ம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. எனினும், லோக்ஜனசக்தி, சிவசேனா, அகாலிதளம் போன்ற கூட்டணி கட்சிகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாகவே ஆட்சி நடைபெறுகிறது. 

இந்த சூழ்நிலையில், தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசை அமைக்கப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். மத்தியில் அமையப்போவது கூட்டணி ஆட்சியா, தனிக்கட்சி ஆட்சியா என்பது அடுத்த மாதம் 23ம் தேதி தெரிந்து விடும்.

Next Story

மேலும் செய்திகள்