கூட்டுறவு சங்க தேர்தல்களில் முறைகேடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்து 600 கூட்டுறவு சங்கங்கள், அன்றாட பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் முடிவுகளை வெளியிட விதித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்க தேர்தல்களில் முறைகேடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
x
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் முறைகேடுகள் நடப்பதாகவும்,வேட்புமனுக்களை ஏற்பதில் பாரபட்சம் இருப்பதாகவும்,உரிய விளக்கமின்றி மனுக்களை நிராகரிப்பதாகவும் 400க்கும் அதிகமானோர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த மதுரை கிளை தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தலாம் எனவும், முடிவுகளை அறிவிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டதுடன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விரைந்து விசாரிக்க உத்தரவிட்டது.

அதன்படி சென்னையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, 
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை ஜூலை 4ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

மேலும், முடிவு அறிவிக்கப்படாத 11,600 கூட்டுறவு சங்கங்களின் அன்றாட பணிகளை கூட்டுறவு வங்கிகளின் அந்தந்த மாவட்ட மேலாளர், சம்பந்தப்பட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்களின் செயலாளர் இணைந்து மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என தெளிவுபடுத்தினர்.ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என்ற தடை உத்தரவு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்