புதன்கிழமை போட்ட கடைசி வீடியோ... பிரபல யூடியூபர் தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி

x

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ராகுல் என் குட்டி. இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு 'ஈட் கொச்சி ஈட்' இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உணவகங்கள் குறித்தும், அங்கு பரிமாறும் உணவுகள் குறித்தும் வீடியோ வெளியிட்டு பிரபலமானதால், உணவுப் பிரியர்களுக்கு பரிச்சயமான நபராக ராகுல் இருந்து வந்துள்ளார்.

உணவு பிரியர்களையும், சமூகங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியான சமையல் கலாச்சாரத்தின் உறுப்பினராகவும் ராகுல் இருந்து வந்துள்ளார்.

இவரது 'Eat Kochi Eat' இன்ஸ்டாகிராம் பக்கத்தை, 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். உணவகங்கள் குறித்தும், அங்கு பரிமாறும் உணவுகள் குறித்து இவர் வெளியிடும் வீடியோக்கள் லைக்ஸ்களை அள்ளும்...

ராகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மலையாள நடிகர் மோகன்லாலுடன் உரையாடிய வீடியோ பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த சூழலில், ராகுல் என். குட்டி குறித்த மனதை உலுக்கும் செய்தி, அவரது ரசிகர்களை சோகத்தில் தள்ளியுள்ளது. மாதவனத்தில் உள்ள அவரது வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில், ராகுல் என். குட்டி உயிரிழந்து கிடந்தது உறவினர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக புதன்கிழமை அன்று அவர் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், திடீரென அவரது தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் பலரும் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

ராகுல் என். குட்டி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் வெளியாகாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்