வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் தனக்கு தானே தண்டனை கொடுத்த ஆந்திர கவுன்சிலர்

x

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி உள்ளது. இங்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முலப்பர்த்தி ராமராஜு போட்டியிட்டுள்ளார்.தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது வார்டில் குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால், தரமான சாலைகள் இவையெல்லாம் வழங்கப்படும் என வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்த நிலையில், வெற்றிபெற்று கவுன்சிலராகியுள்ளார் ராமராஜு.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்குமாறு கேட்ட போது, நகராட்சி நிர்வாகம் தரப்பில் நிதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இருப்பினும் நிதிக்காக ராமராஜு காத்திருந்த நிலையில்,31 மாதங்களாக நிதி ஒதுக்கப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியவில்லை என வருத்தத்தில் இருந்து வந்துள்ளார் ராமராஜு.இந்நிலையில் ஜூலை 31ம் தேதி நகரசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதங்கத்துடன் பேசிய கவுன்சிலர் ராமராஜு தன்னால் மக்களுக்கு நன்மை செய்ய இயலவில்லை என தெரிவித்துள்ளார். அத்தோடு தன் செருப்பை எடுத்து தன்னை தானே அடித்துக்கொண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

தனது வார்டை நகராட்சி நிர்வாகிகள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டதாகவும், குடிநீர் இணைப்புக்கூட வழங்கப்படாத அவலநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் புலம்பியுள்ளார்.வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதை விட நகரசபை கூட்டத்தில் மரணிப்பதே மேல் எனக்கூறி ஆதங்கப் பட்டுள்ளார்.கோபத்துடன் மைக்கை வீசிய அவர், அழுதபடியே நகரசபை கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், மனசாட்சியுள்ள அரசியல்வாதி என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.இருப்பினும் ஒரு சிலர், பப்ளிசிட்டிக்காக இவ்வாறு நடந்து கொள்வதாக விமர்சித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்