"ஐயோ அம்மா..." திணறும் டெல்லி மக்கள் நாலாபுறமும் சோதனை - தலைநகரை சுற்றி சுழன்றடிக்கும் இயற்கை

x

காற்று மாசு என்றால் டெல்லி என்கிற அளவிற்கு தலைநகரில் காற்றை சுவாசித்தால் நோய் இலவசம் என்ற அளவிற்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வாகன பெருக்கம்... தொழிற்சாலை வளர்ச்சி... கட்டுக்கடங்காத கட்டுமானங்கள்... இவற்றுடன் அண்டை மாநிலமான ஹரியானா, பஞ்சாப் மற்றும் உ.பி.யில் எரிக்கப்படும் விவசாய பயிர்கள் போன்றவை காரணமாக கூறப்படுகிறது.

தற்போது காற்று மாசு தவிர்க்க ஏர் பியூரிபையர்களை நாடும் மக்கள் அடுத்து தங்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிரை எதிர் கொள்ள ஹீட்டர் மற்றும் கரி அடுப்புடன் தயாராகி வருகின்றனர்.

குளிர்காலம் வந்தால் போதும்...வெண்பனி போர்த்தி காட்சியளிக்கும் சிம்லாவை விட மைனஸ் டிகிரியில் வெப்பநிலை பதிவானாலும்... டெல்லியில் பனிப்பொழிவு ஏற்படுவதில்லை என்ற வியப்பும் ஏற்படுகிறது.

பொதுவாக, இமயமலையில் பனிப்பொழிவுக்குப் பிறகு, குளிர்ந்த பனிக் காற்று வடமேற்கு இந்தியாவின் சமவெளியை நோக்கித் திரும்பும்போது சமவெளிகளில் வெப்பநிலை மைனஸுக்குச் செல்லும். அப்படி தான் டெல்லியில் குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு செல்கிறது.

ஒரு மேகத்தில் உள்ள நீராவியானது குளிர்ச்சியாக இருந்தால் பனி திவளைகள் உருவாகி பனி பொழிவு ஏற்படும். ஆனால் இங்கு இமைய மலையில் இருந்து டெல்லி நோக்கி வீசும் காற்று வறண்டதாக இருப்பதால் பனிப்பொழிவு ஏற்படுவதில்லை

இது ஒருபுறமிருக்க நேபாளத்திலும், உத்தரகாண்டிலும் நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம் டெல்லியிலும் நில அதிர்வுகள் உணரப்படுகின்றன. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை நான்கு முறை நிலநடுக்கம் கண்டு அதிர்ந்து போய் இருக்கிறது, டெல்லி.

இதற்கு காரணம், இமயமலை தொடர்களுக்கு அருகாமையில் சுமார் 200 - 300 கிலோ மீட்டர் தொலைவில் டெல்லி அமைந்திருப்பதுதான். இந்தியாவின் நில அதிர்வு மண்டலத்தில், இமயமலை தொடர் மண்டலம் V கீழ் உள்ள நிலையில், அதன் அருகில் உள்ள டெல்லி மண்டலம் IV -ல் உள்ளது.

கடுங்குளிரும்... காற்று மாசும் டெல்லிக்கு ஒன்றும் புதிதல்ல...இதில் கூடுதலாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்து , தலைப்பு செய்தியில் இடம்பிடித்தது, டெல்லி வெள்ளம்.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றின் நீர்மட்டம் 208.48 மீட்டரை எட்டியதால்

ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் அது. தற்போது அதே யமுனா நதி நஞ்சு நுரையால் காட்சியளிக்கிறது.

இப்படி, இயற்கையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் தலைநகரை பாதுகாக்க அரசின் முயற்சி மட்டும் பயனளிக்காது என்றும் மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


Next Story

மேலும் செய்திகள்