40,30,827 முறை பிரியாணியை.. ஒரே நாளில் 4.3 லட்சம் பிரியாணி ஆர்டர்.. ஸ்விக்கியை மிரளவிட்ட குடும்பம்

x

இந்தியர்களுக்கும்...பிரியாணிக்குமான உறவு...வார்த்தைகளால் விவரிக்க முடியாதது... நண்பர்களின் பிறந்தநாள், பணியிடத்தில் ப்ரமோஷன், திருமணம் என வாழ்வில் நடக்கும் பல நல்ல விஷயங்களுக்கு எல்லாம் ட்ரீட்டாக அமைவது பிரியாணியே..

உணவகங்களுக்கு சென்றால் மெனு கூட பார்க்காமல் பிரியாணி ஆர்டர் செய்பவர்கள் போல் ஆன்லைனிலும் பலரின் முதல் ஆப்ஷனாக பிரியாணியே உள்ளது.

இந்நிலையில், ஆண்டுதோறும் அதிக ஆர்டர்களை குவித்து அசர வைத்த உணவுகளின் பட்டியலை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி வெளியிடுவது வழக்கம்.

8 ஆண்டுகளாக ஸ்விக்கி வெளியிடும் ஆண்டறிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது கமகமக்கும் பிரியாணி தான்..

அதிலும் இந்த ஆண்டில் ஸ்விக்கி செயலியில் ஒரு விநாடிக்கு 2.5 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

அத்துடன் ஒவ்வொரு 5.5 சிக்கன் பிரியாணிக்கும் ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது..

இது மட்டுமா...? கடந்த ஜனவரி 1ம் தேதியன்று ஒரே நாளில் நான்கரை லட்சம் பிரியாணி உணவுகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் இந்தாண்டில் கிட்டத்தட்ட ஆயிரத்து 633 பிரியாணிகளை ஆர்டர் செய்ததாக ஆச்சரியமூட்டும் தகவலும் வெளியாகியுள்ளது..

மேலும் ஸ்விக்கி செயலியில், 40 லட்சத்து 30 ஆயிரத்து 827 முறை பிரியாணி தேடப்பட்டுள்ளதாகவும் புருவம் உயர வைக்கும் தகவலை பகிர்ந்துள்ளது ஸ்விக்கி.

இந்தாண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் போது ஸ்விக்கியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது பிரியாணி.

குறிப்பாக அக்டோபர் மாதம் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது, சண்டிகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஒரே வேளையில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளனராம்..

அதுமட்டுமன்றி அந்த போட்டியின் போது, இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 250 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஆச்சரியமடைய செய்துள்ளது ஸ்விக்கி..

ஸ்விக்கியில் பல உணவகங்களில் விதவிதமான உணவுகள் விற்பனை செய்யப்பட்டாலும்..அவை அனைத்தையும் கடந்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளது இந்தியர்களின் ஃபேவரைட்டான பிரியாணி


Next Story

மேலும் செய்திகள்