வேகமெடுக்கும் 3வது அலை - எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்?

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
x
இந்தியாவில் கடந்த 30 நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு ஐயாயிரத்து 326 ஆக இருந்த நிலையில், 

டிசம்பர் 29 ஆம் தேதி 33 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10, ஆயிரத்தை கடந்தது. 

அதன் பிறகு தினசரி 20 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரை அதிகரிக்க தொடங்கிய தினசரி கொரோனா பாதிப்பு, 7 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி  5 ஆம் தேதி ஒரு லட்சத்தை கடந்தது. 
 
தற்போது இந்தியாவில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்து 79 ஆயிரமாக பதிவாகியுள்ளது. 

இரண்டாவது அலையை விட ஒமிக்ரான் பரவலால் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், இது குறித்து பல்வேறு ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்ட வண்ணம் உள்ளன. 

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியாவில் ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு உச்சம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சமயத்தில் நாளொன்றுக்கு 10 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. 

இதைபோல் சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், இந்தியாவில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் மூன்றாவது அலை புதிய உச்சம் பெறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு இரண்டாவது அலையின் போது கொரோனாவால் பரவல் 1 புள்ளி 69 ஆக இருந்த நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 4 பேர் வரை பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மற்றொரு ஆய்வறிக்கையில், அடுத்த மாதம் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கொரோனா இரண்டாவது அலையை விட புதிய உச்சம் பெறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  

நாளொன்றுக்கு  ஐந்து லட்சம் வரை பாதிப்புகள் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது அலையின் உச்சத்தின் போது, இந்தியாவில் தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை கடந்து பதிவாகி வந்தது. 

இந்நிலையில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவன இயக்குனர்  கிறிஸ்டோபர் முர்ரே வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் 82.5 சதவீதம் பேர் எவ்வித நோய் அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளாக கூடும் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவுக்கு உயிரிழப்பு குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்